30 நாட்களுக்கு உக்ரைன் பகுதியில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார்.
மூன்றாடுகளாக நீடித்துவரும் உக்ரைன் – ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக 30 நாட்களுக்கு உக்ரைன் பகுதியில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று புடின் உறுதியளித்துள்ளார்.
கடந்த 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்ததுடன், ஆயுத உதவியும் வழங்கின.
இதற்கிடையே, இந்தப் போரை நிறுத்த பிரதமர் மோடி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்பும், போரை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதுதொடர்பாக சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கடந்த 11-ம் திகதி நடந்த பேச்சுவார்த்தையின்போது 30 நாள் போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்தது.
இதை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொண்டார். ஆனால் ரஷ்யா உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை.
ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால், பொருளாதார தடை விரிவுபடுத்தப்படும் என்று அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகள் கடந்த 14-ம் திகதி எச்சரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில், நேற்று புதின் – ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடினர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் பேச்சுவார்த்தை நீடித்தது.
பேச்சுவார்த்தையின் போது ட்ரம்ப் உக்ரைனைப் போல் ரஷ்யாவும் 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். எனினும், புடின் அதனை முழுமையாக ஏற்கவில்லை. மாறாக 30 நாட்களுக்கு உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் மட்டும் நடக்காது என்று கூறியுள்ளார்.
“30 நாட்கள் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டால் உக்ரைன் அந்த காலக்கட்டத்தைப் பயன்படுத்தி கூடுதல் படைகளை, ஆயுதங்களைக் குவிக்கும். தன்னை இராணுவ ரீதியாக பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளும். எங்களை போர் நிறுத்தத்துக்கு அழுத்துவதைக் காட்டிலும் உக்ரைனுக்கு வெளிநாடுகள் வழங்கிவரும் இராணுவ தளவாட உதவிகள், உளவுத் தகவல்களை நிறுத்தினாலே போர் முடிவுக்கு வரும்.” என்று புடின் கூறியுள்ளதாகத் தெரிகிறது.