ரஷ்யாவுடன் போரிட்டுவரும் உக்ரைனுக்கு பாதுகாப்பு மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கிவரும் ஆஸ்திரேலியா, ரஷ்யாவின் 35 நிறுவனங்கள்மீது பொருளாதார தடை விதித்துள்ளது.
ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி ரஷ்ய செய்தி தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி துறைகளில் செயற்படும் 35 நிறுவனங்கள் மீதே இவ்வாறு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரஷ்ய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பெலாரஸில் உள்ள மூத்த இராணுவ தளபதிகள் உட்பட 10 நபர்கள்மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
” உக்ரைன்மீதான ரஷ்யாவின் சட்டவிரோத மற்றும் ஒழுக்கக்கேடான படையெடுப்புக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்த சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
2014 மார்ச் முதல் ரஷ்யாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 25 தடவைகளுக்கு மேல் தடைகளை விதித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் தடை பட்டியலில் ஆயிரத்து 100 ரஷ்யர்களும், 300 நிறுவனங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
