உலகில் இராணுவ செலவுகள் 2022 ஆம் ஆண்டில் 2.24 டிரில்லியன் டொலர்களாக எப்போதும் இல்லாத அளவு அதிகரித்திருப்பதோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து ஐரோப்பாவில் இராணுவ செலவு வேகமாக உயர்ந்திருப்பதாக முன்னணி பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான ஸ்டொக்ஹொம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உலகில் இராணுவ செலவுகள் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாகவும் அதிகரித்திருப்பதாக அந்த நிறுவனம் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பாவில் 13 வீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதோடு அது குறைந்தது 30 ஆண்டுகளில் இல்லாத வேகமான அதிகரிப்பாக உள்ளது. இதில் அதிகமான செலவுகள் உக்ரைன் மற்றும் ரஷ்ய போருடன் தொடர்புபட்டது என்பதோடு ரஷ்ய அச்சுறுத்தல் காரணமாகவும் இராணுவ செலவுகள் அதிகரித்திருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
2022 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இராணுவ செலவு 34 வீதம் அதிகரித்திருப்பதோடு அது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.2 வீத அதிகரிப்பாகும்.
உலகில் அதிக இராணுவ செலவை கொண்ட நாடாக அமெரிக்க தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாடு 2022 இல் 0.7 வீத அதிகரிப்புடன் 877 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. இது மொத்த உலக இராணுவ செலவில் 39 வீதமாக உள்ளது.
இரண்டாவது இடத்தில் நீடிக்கும் சீனா 2022 இல் 292 பில்லியன் டொலர்களை செலவிட்டிருப்பதோடு 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.2 வீத அதிகரிப்பாக உள்ளது. அந்த நாடு 28 ஆண்டுகளாக தொடர்ந்து இராணுவ செலவுகளை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் ரஷ்யாவின் இராணுவச் செலவுகள் 2022இல் 9.2 வீதம் அதிகரித்து 86.4 பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.










