உடப்புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பாஹலகம பகுதியில் வீடொன்றில் இருந்து ஆணும், பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
அத்துடன், குறித்த சடலங்கள் தொடர்பான சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை நடவடிக்கை இன்று நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.
வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 39 மற்றும் 42 வயதுகளுடைய ஆணொருவரும், பெண்ணொருவரும் நேற்று காலை சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.
மூன்று பிள்ளைகளின் தாயான டபிள்யூ . எம். பிரியங்கனி (வயது 42) மற்றும் திருமணமாகாத ஆண் பி.எம்.அனுர பண்டார (வயது 39) ஆகிய இருவருமே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர் என உடப்புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையில் தகாத உறவு இருந்து வந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.
இவ் இருவருக்குமிடையில் இருந்து வந்த தகாத உறவு பெண்ணின் கணவருக்கு தெரிய வந்து கடந்த (04.04.2024) மாலை தாக்குதல் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து குறித்த பெண் தனது வீட்டை விட்டு தகாத உறவை பேணி வந்த நபருடன் சென்றுள்ள நிலையில் இவ் இருவரும் வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் (06) காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
ஆ.ரமேஷ்