உயர்மட்ட சீன தூதுக் குழுவினர் சபாநாயகரைச் சந்தித்தனர்
சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் (SCNPC) கௌரவ உப தலைவர் வாங் டோங்மிங் (H.E. Wang Dongming) தலைமையிலான சீன மக்கள் குடியரசின் உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று (17) பாராளுமன்றத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்களைச் சந்தித்தனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான ஆழமான மற்றும் நீடித்த உறவை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன டுத்துரைத்தார்.
இந்த உயர்மட்ட சீன பாராளுமன்றக் குழுவின் விஜயம் பாராளுமன்ற இராஜதந்திரம் மீது சீனா வழங்கும் முக்கியத்துவத்தையும், இரு நாடுகளுக்குமிடையேயான நீண்டகால ஒத்துழைப்பின் வலிமையையும் பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தித்வா சூறாவளியின் காரணமாக அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து சபாநாயகர் தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்ததுடன், இந்தக் காலகட்டத்தில் சீனா வழங்கிய ஆதரவு மற்றும் உதவிகளுக்காக சீனா அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இலங்கையின் மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் (SCNPC) கௌரவ உப தலைவர் வாங் டோங்மிங் அவர்கள், இலங்கைக்கு விஜயம் செய்ய அழைத்தமைக்கு தனது பாராட்டைத் தெரிவித்ததுடன்,
இரு நாடுகளுக்கும் இடையே பாராளுமன்ற பரிமாற்றங்கள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சீனாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். நெருங்கிய மற்றும் நட்பு நாடாக, இலங்கை அதன் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆதரவளிப்பதற்கு சீனா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட சவால்களைச் சமாளிக்க இலங்கை அரசாங்கத்திற்கான சீனாவின் ஆதரவை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அத்துடன், கௌரவ உப தலைவர் வாங் டோங்மிங் அவர்கள் இலங்கையின் ஜனாதிபதி அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்ததை நினைவுகூர்ந்ததுடன், அது இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளுக்கு ஒரு புதிய மூலோபாய வழிகாட்டியாகச் செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.
மேலும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மைகளை ஏற்படுத்தும் வகையில் பொருளாதார ஒத்துழைப்பு, கல்வி, கலாசாரம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற சீனா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் இலங்கைக்கு சீனா தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்காக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்கள் இதன்போது நன்றியைத் தெரிவித்தார்.










