‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இன்றுடன் மூன்றாண்டுகள்!

இலங்கையை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையுமே விழிபிதுங்க வைத்த – விழிநீர் பெருக்கெடுக்க வைத்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் அரங்கேறி இன்றுடன் மூன்றாண்டுகள் ஆகின்றன.

எனினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது.

தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியென விசாரணைகளை ஆதாரம்காட்டி அரசு அறிவிப்புகளை விடுத்தாலும், அவற்றை ஏற்கும் நிலையில் கத்தோலிக்க மக்களும், கத்தோலிக்க சபையும் இல்லை. இது விடயம் சம்பந்தமாக இலங்கையில் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பிலும் மேற்படி தரப்புகளுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் இன்று சர்வதேச விசாரணை கோரப்பட்டுள்ளது .

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்று 36 மாதங்கள் கடக்கும் நிலையில்கூட, முக்கியமான சில விடயங்கள் சம்பந்தமாக இன்னமும் மர்மம் நீடிக்கின்றது. சில கேள்விகளுக்கு தெளிவான பதில்களும் இல்லை.

2019 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சிறார்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 260 பேர் உடல்சிதறி பலியானார்கள். 477 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இவர்களில் சிலர் உடல் அவயங்களை இழந்து, வலிகளை சுமந்தப்படி வாழ்வதை இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது.

மூன்று தேவாலயங்கள், மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட ஏழு இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவங்கள் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பொருளாதார ரீதியிலும் பலத்த அடி விழுந்தது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சூழலையும் உருவாக்கியது.

Related Articles

Latest Articles