‘ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்குவதற்கு ஜனாதபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகின்றது.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு கூற வேண்டிய தரப்பின் விவரம் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன் வெளியிடப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையிலேயே நாமல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எம்மிடம் வினவியோ அல்லது ஊடகங்கள் முன் வந்து கருத்து வெளியிட்டோ பலன் இல்லை.
தற்போதைய ஆட்சியில் பொலிஸில் உயர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ள நபரே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின்போது சிஐடி பிரதானியாக இருந்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக உள்ளவரும் பிரதானியாக இருந்தார். இவர்கள் இருவரிடமும் வினவலாம்.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர் ஒருவரின் மகன்மார் இருவரே தற்கொலை குண்டுதாரிகள். எனவே, ஒரு கட்சியாக இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி எடுத்த நடவடிக்கை என்ன?
தமது தரப்பில் தவறு உள்ளதால் சில அதிகாரிகள் அரசியல் அடைக்கலம் தேடியுள்ளனர். கடந்த கால அரசாங்கங்கள்மீது பழிபோட்டுவிட்டு அவர்களை அரசாங்கம் பாதுகாக்கின்றது.” -எ ன்றார்.