உரிய காலத்துக்குள் உள்ளாட்சி தேர்தல் – உறுதிப்படுத்தினார் அமைச்சர்

உரிய காலப்பகுதிக்குள் உள்ளாட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தளம், ஆராச்சிக்கட்டுவ தொகுதி கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு

” மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் முன்கூட்டியே தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதன்போது தேர்தலுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியவர்கள், இன்று தேர்தலை நடத்துமாறு குரல் எழுப்பி வருகின்றனர். தேர்தல்களை பிற்போடும் பழக்கம் எமது கட்சிக்கு கிடையாது. எந்நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார்.

ஆனால் தற்போதைய உள்ளாட்சிமன்ற தேர்தல் முறைமையில் குழப்ப நிலை உள்ளது. உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகம். அதனால்தான் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள்கூட தேர்தல் முறைமை மாற்றத்தை வலியுறுத்தியுள்ளனர்.

எது எப்படி இருந்தாலும் உரிய காலத்துக்குள் உள்ளாட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும். அதற்குள் அனைத்து தரப்புகளின் ஒத்துழைப்புடன் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவர முயற்சிப்போம்.” – என்றார்.

Related Articles

Latest Articles