உருளைக் கிழங்குக்கு வெளியே முதன் முறையாக உரிமை அரசியலை பேச முனையும் ராதா – திலகர் அணி இகழ்ச்சி!

இதுவரை காலம் உருளைக் கிழங்கும் உர மருந்துமே பிரச்சினை என எண்ணிப் பேசி வந்த வே. ராதாகிருஷ்ணன் தூக்கத்தில் இருந்து விழித்து உரிமை அரசியலைப் பேசி இருப்பது வரவேற்கத்தக்கது என மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் நா. கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.

நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே. ராதாகிருஷ்ணன் விடுத்த ஊடக அறிக்கைக்கு பதில் அறிக்கை ஒன்றினை விடுத்திருக்கும் அவர் மேலும் தெரிவிப்பதாவது,

நுவரெலிய மாவட்டத்திற்கு மேலதிக ஐந்து பிரதே சபைகளை தாபிக்க அரசு 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆந் தேதி அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டிருந்தது. எனினும் தற்போதைய அரசாங்கம் அவ் வர்த்தமானியினை மீறி, நுவரெலிய மாவட்டத்திற்கு வழங்க வேண்டிய ஐந்து பிரதேச செயலகங்களுக்குப் பதிலாக இரண்டு உப காரியாலயங்களையே திறந்து வைத்துள்ளது.

இதேநேரம் குறிப்பிட்ட வர்த்தமானியில் காலி மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்டிருந்த மூன்று பிரதேச செயலகங்களும் முழுமையாக தாபிக்கப்பட்டுள்ளன. இது ஒரே நாட்டில் வாழும் மக்களை மாவட்ட அடிப்படையில் இருவேறாக பிரித்து, பாரபட்சமாக நடத்தப்படுவதையே காட்டுகின்றது. தற்போதைய அரசாங்கத்தின் இத்தகைய பாரபட்டசமான நடத்துகை தொடர்பில் மலையக அரசியல் அரங்கமானது 2021 நவம்பர் 24 ஆந் திகதி அதனுடைய தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ம.திலகராஜா தலைமையில் நுவரெலிய மாவட்டச் செயலாளருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் முதன்முதலில் பொதுமக்கள் மத்தியில் ஊடகங்களினூடாக வெளிக்கொணர்ந்தது.

அதன் பின்னர் குறித்த விடயத்தைத் தெரிந்துக்கொண்ட கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், முதன்முதலில் கருத்து வெளியிட்டிருந்தார். இதேநேரம் நுவரெலிய மாவட்ட எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் வாய்மூடி மௌனிகளாக இருந்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

நுவரெலிய மாவட்டத்திற்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி தொடர்பில் மலையக அரசியல் அரங்கம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவென பொதுமக்கள் மனுவொன்றைத் தயாரித்து நுவரெலிய மாவட்டம் முழுவதும் கையெழுத்துக்களைச் சேகரித்து நுவரெலிய மாவட்டச் செயலாளரினூடாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தது. அதனுடைய அடுத்தக் கட்டமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினையும் செய்துள்ளது. குறித்த முறைப்பாட்டிற்கு மேலதிகமாக தற்போது வடக்கிலிருந்து தெற்குவரை இரண்டாம் கட்டமாக பொதுமக்கள் மனுவில் கையெழுத்துக்களை சேகரித்து வருகிறது.

இதுவரை நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாகவே இருக்கிறார்கள். எனினும் கடந்த பத்து ஆண்டுகளில் உருழைக்கிழங்கு விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசி பிரபல்யமடைந்த வே.ராதாகிருஷ்ணன் இத்தனை நாட்களாக நித்திரையிலிருந்துவிட்டு திடீரென எழுந்து பேசுவது ஆச்சர்யத்திற்குள்ளாக்குகிறது. எனினும் குறித்த விடயம் தொடர்பில் ஆழமாக அறிந்துக்கொண்டு பேசவேண்டும் எனவும் மலையக அரசியல் அரங்கம் எதிர்பார்க்கின்றது.

தமது உரிமைகளை வென்றெடுக்க பொதுக்கள் கையெழுத்துக்களைத் திரட்டி குறித்த தரப்பிற்கு வழங்கி அழுத்தங்களைப் பிரயோகிப்பது, தமது நியாயப்பிரசாரங்களை முன்னெடுப்பது பொதுமக்கள் போராட்ட வடிவங்களில் ஒன்று என்பதும், இந்த போராட்ட முறைமையினை முற்போக்கு அரசியல் செயற்பாட்டாளர்கள் இதற்கு முன்னரும் முன்னெடுத்து வெற்றியடைந்துள்ளார்கள் என்பதும் முக்கியமானது. தற்போது வடக்கில் பயங்கரவாத தடுப்புச் சட்டத் திருத்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மனுவில் கையெழுத்திடும் போராட்டமொன்று பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.சுமந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்படுவதை சமகால உதாரணமாகக் கொள்ளலாம்.

எனவே பாராளுமன்ற உறுப்பினர் வே.ராதாகிருஷ்ணன் அவர்களை பொதுக்கள் போராட்ட வடிவங்களைப் புரிந்துக்கொண்டு கருத்துக்களை வெளியிட வேண்டும் எனவும், தங்களது இயலாமைகளை மூடிமறைக்க இதுபோன்ற பிரசித்திப்பெற்ற போராட்ட வடிவங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறது.

இதுபோன்ற கருத்துக்களைப் பரப்பி மக்களைத் தவறாக வழிநடத்த வேண்டாம் எனவும் கடந்த ஒரு வருட காலமாக அறியாமையில் இருந்த உங்களை மலையக அரசியல் அரங்கத்தின் செயற்பாடுகளே விழிப்படையச் செய்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கடந்த இரண்டு வருடங்களாக எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக நுவரெலிய மாவட்ட மக்களுக்காக எதனையும் செய்யாத நீங்கள் தற்பொழுதேனும் விடயத்தைப் புரிந்துக்கொண்டமையை மலையக அரசியல் அரங்கம் பாராட்டுகிறது.

நுவரெலிய மாவட்டத்திற்கென வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஐந்து பிரதேச செயலகங்களையும் முழுமையாக திறக்க உங்களது பணி காத்திரமானதாக அமைய எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Related Articles

Latest Articles