” இலங்கையின் புலனாய்வு பிரிவு பாதுகாக்கப்பட வேண்டும். உளவு தகவல்கள் தொடர்பில் பகிரங்கமாக விவாதம் நடத்தப்படக்கூடாது. ஆனால் நாடாளுமன்றத்தில் நடைபெறும் இந்த விவாதத்தை பார்த்தால் பயங்கரவாதிகள்கூட நிச்சயம் சிரிப்பார்கள். எனவே, மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர், மேலும் கூறியவை வருமாறு,
” புலனாய்வு பிரிவு பாதுகாக்கப்பட வேண்டும், அதன் திறமை பற்றியோ இரகசியம் பற்றியோ, நகர்வுகள் பற்றியோ கதைக்ககூடாது. இந்தியா, அமெரிக்கா, ஜேர்மன், இஸ்திரேல், சீனா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் புலனாய்வு பிரிவு குறித்த எந்தவொரு தகவலையும் திரட்ட முடியாது. அந்தளவுக்கு பலமாக இருக்கின்றது.
ஆனால் இந்த நாடாளுமன்றத்தில் நேற்று (நேற்றுமுன்தினம்) நடந்த விவாதத்தை பார்த்தால் பயங்கரவாதிகளும், உளவு அமைப்பினரும் சிரிப்பார்கள், முக்கிய தகவல்கள் இருந்திருந்தால் நாடாளுமன்றத்தில் இரகசிய அறையொன்றில் தொலைபேசிகளை ‘ஓப்’செய்து வைத்துவிட்டு, அதிகாரிகளையும் அழைத்து கதைத்திருக்கலாம்.ஆனால் இங்கு நடந்ததை பார்த்தால் கவலையாக உள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
எனவே, பிளவுபட்டுநின்று, தகவல்களை வெளியிட்டு நாட்டை அழிவு நோக்கி கொண்டுசெல்லாது பொறுப்புடன் செயற்பட வேண்டும்.” – என்றார்.
