” ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்கு எதிராக தனிப்பட்ட ரீதியில் நாடுகளால் தடைவிதிக்கமுடியும். எனவே, சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்திலான தடைகளை அமுல்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.” – என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இத தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” போரின்போது சர்வதேச சட்டத்திட்டங்கள் மீறப்பட்டனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக பொறிமுறையொன்று உருவாக்கப்படும் என ஐ.நா. பொதுச்செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2009 இல் உறுதியளித்திருந்தார். பான் கீ மூன் இலங்கை வந்து மூன்று நாட்களுக்கு பின்னர் இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நாவில் விசேட அமர்வொன்றுகூட நடைபெற்றது. இதன்போது இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை தடுப்பதற்கு அப்போதைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு வழங்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு, செயற்படுத்துவதற்கு ராஜபக்ச அரசு நடவடிக்கை எடுக்காததன்காரணமாகவே 2012 இல் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக 2014 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்படவிருந்தது. அதற்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் குழுவொன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் அதிஷ்டவசமாக 2015 இல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. வெளிவிவகார அமைச்சராக நான் பதவியேற்றதும் இந்தியா பயணத்தின் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை சென்று சந்தித்தேன். கால அவகாசம் கோரினேன். இதன்படி இலங்கை தொடர்பான அறிக்கை 2015 மார்ச்சில் முன்வைக்கப்படவில்லை. அதன்பின்னர் 2015 செப்டம்பரில் நாம் பிரேரணையொன்றை முன்வைத்தோம். எமது திறமையால் அதற்கு அனைத்து நாடுகளின் ஆதரவும் பெறப்பட்டது.
30/1 தீர்மானத்திலுள்ள உள்ளடக்கங்கள் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிந்தே வைத்திருந்தார். அவர் அனுமதிகூட வழங்கியிருந்தார். தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நானே அவருக்கு எடுத்துரைத்தேன். நாட்டுக்கு ஏற்படவிருந்த பெரும் பாதிப்பை தடுத்து ஜீ.எல்.பி. வரிச்சலுகை, மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கம் போன்றவற்றை வென்றோம். அப்படி இருந்தும் தேசத்துரோக முத்திரை குத்தப்பட்டது.
அதேவேளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தற்போதும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. விசாரணைகளுக்கான சாட்சியங்களை திரட்டுவதற்கு குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 2023 வரை காலம் உள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் தடை விதிக்க முடியாது. எனினும், நாடுகளால் தனிப்பட்ட ரீதியில் தடைகளை விதிக்கமுடியும். எவ்வித குற்றமும் இழைக்காத சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் எந்தவொரு தடையையும் விதிக்கவேண்டாம் என சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.
போர்க்குற்றங்கள் இடம்பெற்றனவா என்பது எமக்கு தெரியாது. இடம்பெற்றுள்ளன என்று எவரும் கூறவில்லை. இடம்பெற்றுள்ளன என்று குற்றச்சாட்டே முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, அது போர்க்குற்றமா அல்லது எந்த வகையான குற்றம் என்பதை விசாரணை நடத்தினால்தான் கண்டறியமுடியும்.” – என்றார்.