உள்ளக பொறிமுறை ஊடாகவே தீர்வு – அரசின் உறுதியான நிலைப்பாடு அறிவிப்பு

தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டு பொறிமுறையொன்றின் ஊடாகவே அரசாங்கம் தீர்வுகாணுமென நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

சர்வதேச ரீதியிலான தலையீடுகளன்றி உள்நாட்டு பொறிமுறையொன்றினூடாகவே அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்த அமைச்சர், அடுத்த மாதம் புலம்பெயர் அமைப்புக்களின் தலைவர்களுடன் பேச்சு மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்தப் பேச்சு வெற்றிபெறுமானால் இலங்கை மீது சர்வதேசத்தின் தலையீடுகள் காணப்படாதென்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

” சர்வதேச பொறிமுறையின் ஊடாக சர்வதேச நிறுவனங்களின் கண்காணிப்பின் கீழ் உள்நாட்டு தேசிய பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதே ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

எனினும் தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு இலங்கையே நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அந்தவகையில் உள்நாட்டு பொறிமுறையொன்றின் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

உள்நாட்டு பொறிமுறையின் கீழ் தீர்வுக்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் பெறுபேறுகள் கிடைக்கும் பட்சத்தில்அதற்கான சர்வதேசத்தின் ஒத்துழைப்புகள் கிடைக்குமென்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டு வருகிறது. அதுதொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு பரிந்துரைகள் பலவற்றையும் வழங்கியுள்ளது. அந்த பரிந்துரைகளை அடிப்படையாகக்கொண்டு அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு தெளிவுபடுத்திய அமைச்சர், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தில் காணப்படும் 7,000 கோவைகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த வருட இறுதிக்குள் அந்த விசாரணைகளை நிறைவுசெய்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்காக நிதி அமைச்சின்கீழ் மூன்று அலுவலகங்கள் செயற்பட்டு வருகின்றன. அந்தவகையில் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகமும் அதில் உள்ளடங்குகின்றது. அந்த அலுவலகத்திலுள்ள 7,000 கோவைகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் 65 கோவைகள் மாத்திரமே விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் எமது நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்துவதற்கு இத்தகைய தாமதங்களே முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

கடந்த மூன்று மாத காலங்களில் நாம் 1,800 கோவைகளை விசாரணை செய்திருக்கின்றோம். அதற்கிணங்க அடுத்த வருட இறுதிக்குள் அனைத்து கோவைகளையும் விசாரணை செய்து முடிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அந்த விசாரணைகள் முடிவடைந்ததும் அந்த விடயங்களை இழப்பீட்டுக்கான அலுவலகமே கையாளவுள்ளது.

அரசாங்கமானது அவ்வாறு காணாமலாக்கப்பட்டோருக்காக வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை இரண்டு இலட்சமாக அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. கடந்த அமைச்சரவையில் அதற்கான அனுமதி கிடைத்துள்ளது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles