உள்ளக பொறிமுறை வலுப்படுத்தப்பட்டே பொறுப்புக்கூறல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தமது இலங்கை பயணத்தின்போது இவற்றை நேரில் அவதானித்தார் – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயம் நாட்டுக்கு மிக முக்கியத்துவமிக்கதாக அமைந்தது. ஏனெனில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இயங்குகின்றது. எனினும், வடக்கு, கிழக்கு போர் விவகாரம் தொடர்பிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்படுகின்றது என்ற விம்பம் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வி உரிமை, வாழும் உரிமை, குடிநீர் உரிமை, மாற்றுதிறனாளிகளுக்கான உரிமை, சமூக நீதி உட்பட மனித உரிமைகள் தொடர்பில் மீளாய்வு செய்வதே மனித உரிமைகள் ஆணையாளரின் பொறுப்பாகும்.
2022 ஆம் ஆண்டில் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் யோசனை முன்வைக்கப்பட்டது. இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குமாறு அதில் வலியுறுத்தப்பட்டது. சர்வதேச தலையீடும் கோரப்பட்டது.
நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, கால அவகாசம் கோரினோம். தேசிய பொறிமுறை ஊடாக பொறுப்புக்கூறல் நடவடிக்கை வலுப்படுத்தப்படும் என உறுதியளித்திருந்தோம். அந்த கோரிக்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை செவிமடுத்தது.
அதேபோல எம்மால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையை கண்காணிப்பதற்கு இலங்கை வருமாறும் அழைப்பு விடுத்தோம். அதற்கமையவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகை தந்தார்.
தேசிய பொறிமுறை ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை அவரால் நேரில் அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு எந்தவொரு தேர்தல் வன்முறைச் சம்பவமும் இடம்பெறவில்லை. நாம் வெற்றிக்கொண்டாட்டங்களிலும் ஈடுபடவில்லை.
பொதுத்தேர்தல் அமைதியாக நடந்தது. ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழு நாட்டுக்கு வந்தது. சிறப்பான அறிக்கையை வெளியிட்டனர். இதுதான் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
யாழ். பலாலி வீதியில் 37 வருடங்களாக மூடப்பட்டிருந்தது. அதனை நாம் திறந்தோம். இப்படி பல நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் நிலைப்பாட்டிலேயே உள்ளோம். அதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அச்சட்டம் நிச்சயம் நீக்கப்படும்.
காணாமல்போனோர் விவகாரத்தில் தலையிட்டுள்ளோம். அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நீதி வழங்கப்படும். இறந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. நிகழ்நிலைக் காப்பு சட்டம் மீளாய்வுக்குட்படுத்தப்படும்.
நாம் அதிகாரத்துக்கு வந்த பிறகு இனவாதம் மற்றும் மதவாதம் தலைதூக்க இடமளிக்கவில்லை. புதிய பயணம் தொடர்பில் நம்பிக்கை வழங்கியுள்ளோம்.” – என்றார்.










