“ உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கே நடுங்கிய அரசு, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லுமா? எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் முயற்சி வெற்றியளிக்காது. ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.”
இவ்வாறு டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசமைப்பில் இடமில்லை. எனினும், இதற்கான முயற்சி குறுக்கு வழியில் இடம்பெற்றால் அதனை எதிர்ப்போம். வீதியில் இறங்குவோம்.
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதென்பது தற்போதைய ஜனாதிபதி நவம்பர் மாதத்துக்கு பின்னரும் பதவியில் இருப்பார் என்பது அல்ல, நவம்பர் மாதத்துக்கு பிறகு ஜனாதிபதியொருவர் இருக்கமாட்டார். இது நாட்டில் அரசமைப்பு நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தும். நிறைவேற்று அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்படும். இது பாரதூரமான நிலைமையாகும்.
ஜே.வி.பி. பிரச்சினையின்போதுகூட 88 காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டது.
எனவே, நவம்பர் மாதத்துக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் பெரும்பான்மை பலமும், சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும். இந்த அரசின் சாதாரண பெரும்பான்மைக்கூட (113) தள்ளாடும் நிலையிலேயே உள்ளது. உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கே நடுங்கிய அரசு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லுமா? இது நடக்காது. எனவே, ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்.” – என்றார்
