‘ஊடகங்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்காதீர்’ – அனுசா சாட்டையடி

” அரசாங்கத்தில் இருக்கும்போது மக்களை மறந்து விட்டு, விபத்துக்கள் ஏற்படும்போது மட்டும் ஊடகங்களுக்காக சில அரசியல்வாதிகள் முதலைக்கண்ணீர் வடிப்பதால் ஒரு பயனுமே இல்லை.” – என்று மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சந்திரசேகரனின் மகளான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

டிக்கோயா போடைஸ் பாதையில் இன்று ஏற்பட்ட பஸ் விபத்து தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இப்பாதையில் விபத்து ஏற்படுவது இது முதன் முறையல்ல, ஆனால் மக்கள் பிரதிநிதிகளாக தங்களை வளர்த்துக் கொள்பவர்களின் கவனயீனமே இவ்வாறான விபத்துக்கள் தொடருவதற்கு காரணமாகின்றன.

தேர்தல் வந்தவுடன் நான் பாராளுமன்றம் சென்றால்தான் உங்களுக்கெல்லாம் விமோசனம் எனக்கூறி குறுக்கு வழியில் வெற்றிபெற்றதும் – அமைச்சர் பதவி அல்லது பிரதி அமைச்சுப் பதவி  ஆகக்குறைந்தது இராஜாங்க அமைச்சாவது கிடைத்தால்தான் மக்களுக்கு விமோசனம் என்று கூறி அதையும் சாதித்து கொண்டு பின்னர் மறந்து விடுகிறார்கள்.

தாங்கள் அரசாங்க அமைச்சர்களாக இருக்கும் போது இப்பாதைக்கு நிதி ஒதுக்கி இதனை அகலமாக்கியிருந்தால்  இன்று இவ்விபத்தினை தடுத்திருக்கலாம்.ஆனால் அமைச்சு வாய்ப்பு ஏற்பட்டவுடன் வாகனம் சுகபோகம் என்று மயக்க நிலைக்கு சென்று விடுகிறார்கள்.

எவ்வளவு நிதி, எவ்வளவு கமிஷன் என்பது மாத்திரமே சிலரது சேவையாகி விடுகிறது. தேர்தல் காலங்களில் இப்பாதையில் எத்தனை முறை இவர்கள் பயணித்திருப்பார்கள், அப்போதெல்லாம் இது பற்றி அமைதியாக இருந்து விட்டு விபத்து நடந்தவுடன் யார் முதலில் அனுதாபம் தெரிவிப்பது யார் முதலில் வைத்தியசாலைக்கு செல்வது அதனை எப்படி முகநூல் மற்றும் ஊடகங்களில் பதிவிடுவது போன்ற செயல்களால் எந்த பயனுமே இல்லை.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியோ அமைச்சு அந்தஸ்தோ உண்மையான மக்கள் சேவையின் ஊடாக கிடைக்க வேண்டும். இது குறுக்கு வழியில் கிடைக்கும் போதுதான் தடுமாற்றமும் உளறல்களும் ஏற்படுகின்றன. இப்போது கூட காலம் தாழ்த்தாது இப்பாதையை அகலமாக்கி பாதுகாப்பாக மாற்றுவதற்கு இவர்கள் முன்வர வேண்டும். இதற்கு என் தந்தையின் கடந்த கால வேவைகளை இவர்கள் முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட்டால்  நான் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles