மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு கீழ் இயங்கும் பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட தலைவரால் ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் இன்று (30) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளரான சாம்பசிவம் சதீஸ்குமாருக்கே இவ்வாறு அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகத்தினரால் தோட்ட மக்களின் அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகள், தொழில் உரிமைகள் மீறப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக கெர்கஸ்வோல்ட் மத்திய பிரிவில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்குப் பயன்படுத்தும் நீர்த்தாங்கியை சுத்தம் செய்து தருமாறு தோட்ட நிர்வாகத்திடம் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், இதனை சுத்தம் செய்துத் தரமுடியாது. அதனை சுத்தம் செய்யும் பணிகளுக்கு தோட்ட நிர்வாகத்தின் செலவில் தொழிலாளர்களை வழங்க முடியாது. இது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து வருமாக இருந்தால் குறித்த நீர்தாங்கியை மூடிவிடுவேன் என கெர்கஸ்வோல்ட் தோட்ட உதவி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொதுமக்கள் தோட்ட உதவி முகாமையாளருடன் கலந்துரையாடி குறித்த நீர்த்தாங்கியை மூட வேண்டாமென கோரிக்கை விடுப்பதற்காக சென்றுள்ளனர். இதன்போது தோட்ட உதவி முகாமையாளர் ஊடகவியலாளர் சதீஸ்குமார் தொடர்பில் பொதுமக்களிடம் அவரது நற்பெயருக்குக் கலங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு விடயங்களைக் கூறியுள்ளார்.
குறிப்பாக தோட்டத்தில் நடைபெறும் ஊழல், மோசடிகளை ஊடகவியலாளர் சதீஸ் மடுல்சீம பெருந்தோட்டத்தின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்து வருவதாகக் கூறியுள்ளார்.
மேலும், தோட்டப் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு தொடர்பில் செய்தி சேகரிப்புக்கு சென்றிருந்த ஊடகவியலாளர் சதீஸின் பணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.
தோட்ட மக்களின் நலனுக்காகக் குரல் கொடுக்கும் ஊடகவியலாளர் சதிஸின் பக்கம் நிற்க வேண்டிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட தலைவர் வீரையா வாசுதேவன், வெளிக்கள உத்தியோகத்தர் தியாகராஜ் என்பரும் தோட்ட உதவி முகாமையாளருடன் இணைந்துகொண்டு ஊடகவியலாளரின் பணிகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருவதோடு, பொதுமக்களின் முன்னிலையில் ஊடகவியலாளரை அச்சுறுத்தியதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










