“எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்தை முற்றுமுழுதாக வறிய மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தும். இந்த அரசாங்கத்தில் ஊழல், மோசடிக்கு இடமே இல்லை.”
– இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட வேலைத்திட்டத்தின் இந்த ஆண்டுக்கான இறுதி நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி இரணைமடுவிலுள்ள ‘நெலும் பியச’ கலையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த 2023/2024 கல்வியாண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக ஒவ்வொரு பாடப் பிரிவிலும் அதியுயர் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இதற்கமைய, வடக்கு மாகாணத்தில் சாதனை படைத்த 274 மாணவர்களுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நிதியுதவிக் காசோலைகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் இந்த நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களை ஊக்குவிப்பதும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய திறமைசாலி மாணவர்களுக்குக் கைகொடுப்பதுமே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்த நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறீபவானந்தராஜா மற்றும் க.இளங்குமரன் ஆகியோரும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளும், பெருமளவான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.










