ஊழல் வாதிகளுக்கு தண்டனை நிச்சயம்!

வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள நிதி இலங்கைக்கு நிச்சயம் எடுத்துவரப்படும். எமது ஆட்சியில் ஊழல் வாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ இலங்கையில் கொள்ளையடிக்கப்பட்ட நிதி வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் நாட்டுக்கு கொண்டுவர வேண்டும். ஊழல், மோசடிகளை நிறுத்துவதற்கு எமது நாட்டை ஆண்ட எந்தவொரு தலைவருக்கும் அக்கறை இருக்கவில்லை. ஊழல், மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கும், சொத்துகளை பறிமுதல் செய்வதற்கும் ஆட்சியாளர்களுக்கு தேவைப்பாடு இருக்கவில்லை.மாறாக ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஊழல் எதிர்ப்பு கோஷம் பயன்படுத்தப்பட்டுவந்தது.

2015 ஜனாதிபதி தேர்தலின்போதே ஊழல், மோசடிகள் தொடர்பில் அதிகம் பேசப்பட்டன. தான் ஆட்சிக்கு வந்த பின்னர் எவரையும் தப்பிச்செல்லவிடமாட்டேன் என மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார்.ஆனால் மைத்திரி ஆட்சிக்கு வந்து சிறிது காலப்பகுதியிலேயே மத்திய வங்கியில் கை வைக்கப்பட்டது.

ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும், கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்ற தேவைப்பாடு மக்களுக்கு உள்ளது. இது தொடர்பில் மக்களை விடவும் எமக்கு கூடுதல் தேவைப்பாடு உள்ளது.

எனவே, இதற்கு தேவையான இராஜதந்திர ஏற்பாடுகள், சட்ட திருத்தம் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles