ஊவா மாகாணத்தில் மொத்தமாக 17 ஆயிரத்து நானூற்று அறுபத்தொன்பது பேர் கோவிட் 19 தொற்றாளர்களாக இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 206 தொற்றாளர்கள் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளனர்.
கோவிட் 19 தடுப்பு செயலணிக் கூட்டம், பதுளை அரச செயலக கேட்போர் கூடத்தில், மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் (இன்று) 13-08-2021ல் நடைபெற்றது. அவ் வேளையிலேயே மேற்கண்ட தகவல்கள் வெளியாகின.
இக்கூட்டத்தில், பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகம, மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஜே. தென்னக்கோன் உள்ளிட்ட மாவட்ட, மாகாண சுகாதார சேவை உயர் அதிகாரிகள், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் பேசுகையில், கோவிட் 19 தொற்றாளர்கள் 977 பேர் மாகாண அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றாளர்கள் 1323 பேர் தத்தம் வீடுகளிலேயே இருந்து வருகின்றனர். மேலும் தினமொன்றிற்கு 500க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டும் வருகின்றனர்.
17469 பேர் கோவிட் 19 தொற்றாளர்களாக இருந்து வரும் நிலையில், இதுவரை 206 பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துமுள்ளனர்’ என்று கூறினார்.
மேலும் பதுளை மாவட்டத்தில் 13-08-2021ல் கோவிட் 19 தொற்றாளர்கள் ஐவர் உயிரிழந்துள்ளனர். மடுல்சீமைப் பகுதியின் பட்டவத்தையில் 63 வயதுடைய பெண் ஒருவர், கொக்காகலையில் 78 வயதுடைய பெண் ஒருவர், அம்பகஸ்தோவையில் 40 வயது ஆண் ஒருவர், ஊவா – பரணகமையில் 80 வயதுடைய ஆண் ஒருவர், கிராந்துருகோட்டையில் 67 வயதுடைய ஆண் ஒருவர் என்ற வகையில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இவ் உயிரிழப்புக்களுடன் பதுளை மாவட்டத்தில் 149 பேர் மொத்தமாக கோவிட் 19 தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
பதுளை மாவட்டத்தின் லூணுவத்த நகரம் தற்போது இன்று தொடக்கம் மூடப்பட்டுள்ளது. நகரின் மூன்று வர்த்தக நிலையங்களில் மூன்று பேர் உட்பட 20 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியானதையடுத்து, லுணுவத்தை நகர வர்த்தக சங்கத்தினர், நகரத்தின் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடியுள்ளனர். மக்களின் பாதுகாப்பு கருதியே, நகரை மூடியதாக வர்த்தக சங்கத் தலைவர் ஜயந்த பீரிஸ் தெரிவித்தார்.
பதுளையில் 300 பேர் 13-08-2021ல் கோவிட் 19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தத்தம் வீடுகளில், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றதாக, பொது சுகாதாரப் பரிசோதகர் பியல் பத்ம கூறினார்.
தியத்தலாவை ஆடைத் தொழிற்சாலையொன்றில் 41 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக, பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ். சுதர்சன் தெரிவித்தார். இவர்கள் 41 பேரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
எம். செல்வராஜா, பதுளை
		









