ஊவா மாகாணத்தில் மேலதிக வகுப்புகளை நடத்தவுள்ள ஆசிரியர்கள் மற்றும் மேலதிக வகுப்புக்களை முன்னேடுக்கவுள்ள நிறுவனங்கள் கொவிட் – 19 தடுப்பு நிலையத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக, ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முசாம்மில் தெரிவித்தார்.
ஊவா மாகாண ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, ஆளுனர் ஏ.ஜே.எம். முசாம்மில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புக்களின் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் மட்டும், கோவிட் 19 தாக்க சுகாதார வழிமுறைகளுக்கமைய மேற்கொள்வதற்கு துரித நடவடிக்கைகள் தற்போது, எடுக்கப்பட்டுள்ளன.
ஊவா மாகாணத்தில் மேலதிக வகுப்புக்களை நடாத்தும், நடாத்தவுள்ள ஆசிரியர்கள், வெளி மாகாணங்களுக்கு செல்லுதல் மற்றும் வெளி மாகாணங்களிலிருந்து ஆசிரியர்கள் ஊவா மாகாணத்திற்குள் பிரவேசிப்பதற்கும் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளன. இத்தடைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
நாட்டில் கோவிட் 19 தொற்று மிக வேகமாகப் பரவி வருகின்றமையினால், ஊவா மாகாண ஒட்டுமொத்த மக்களைப் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு என்னைச் சார்ந்ததாகவுள்ளது. இப்பொறுப்பினை முறையாகவும், கிரமமாகவும் முன்னெடுத்து வருகின்றேன். எனது இம் முன்னெடுப்புக்களுக்கு, சகலரும் பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு கோருகின்றேன்” என்று குறிப்பிட்டார்.
எம். செல்வராஜா










