” கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்தவர்கள் எங்கு சென்றிருந்தாலும் பரவாயில்லை, உண்மையை சொல்லுங்கள். இரகசியம் பாதுகாக்கப்படும்.” – என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (06) கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொரோனா தொடர்புகளைத்தேடி பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் செல்லும்போது உரிய தகவல்களை வழங்குவதற்கு சிலர் தயங்குகின்றனர். ஏனெனில் சிலவேளைகளில் தவறான இடங்களுக்கு சென்றுள்ளனர். (உதாரணமாக சட்டவிரோத மது விற்பனை நிலையம்.)
இவ்வாறு சட்டவிரோதமான இடங்களுக்கு சென்றதால் வழக்கு தொடுக்கப்படலாம் என அஞ்சுகின்றனர். ஆனால் வழக்கு தொடுப்பது எமது நோக்கம் அல்ல,
அந்த இடத்தில் யார், யார் இருந்தார்கள் என்பது உட்பட தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு தேவையான தகவல்களை திரட்டுவதே பிரதான நோக்கமாகும்.
அத்துடன், எங்கு சென்றார்கள், எப்படி சென்றார்கள் போன்ற விபரங்களை எல்லாம் வெளியிடமாட்டோம். எனவே, அதிகாரிகளிடம் உண்மையை கூறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.
அதேவேளை, ஊரடங்கு உத்தரவைமீறிய 50பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
