இந்தியாவின் கேரள மாநிலம், கோட்டயம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை கடித்து எஜமானை காப்பாற்றிய நாய், மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. எஜமானரை காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரையே தியாகம் செய்த நாயின் விசுவாசம், அந்த பகுதியை சேர்ந்தவர்களை மெய்சிலிர்க்க செய்தது.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருகச் சாலையை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மகன் அஜேஷ் (வயது 32). இவர் தனது வீட்டில் அப்பு என்ற நாயை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். தினமும் அவர், நாயை வெளியே அழைத்துச் செல்வது வழக்கம். அப்போது அந்த நாய், அஜேஷின் முன்பு வீறு நடை போட்டு செல்லுமாம். அதே சமயத்தில் எஜமானரின் கட்டுக்குள் அந்த நாய் இருக்கும்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் பால் வாங்குவதற்காக அஜேஷ் அருகில் உள்ள கடைக்கு புறப்பட்டார். அப்போது, அப்புவும் அவருக்கு முன்பு சென்றது. செல்லும் வழியில் மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் அஜேஷ் செல்போனில் பேசிக்கொண்டு சென்றதாக தெரிகிறது.
அதே சமயத்தில் முன்னால் சென்ற நாய், கீழே ஏதோ கிடக்கிறது, அதில் எஜமானர் மிதித்து விடக்கூடாது என நினைத்து மின்கம்பியை கடித்துள்ளது. இதனால் அந்த நாய் மின்சாரம் தாக்கி அதே இடத்திலேயே துடிதுடித்து இறந்தது. இதனை பார்த்த அஜேஷ், தன்னை காப்பாற்றுவதற்காக செல்லமாக வளர்த்த நாய், உயிர் தியாகம் செய்து விட்டதே என கதறி அழுதார்.
இதுபற்றி தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து நாயின் உடலை மீட்டனர். எஜமானரை காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரையே தியாகம் செய்த நாயின் விசுவாசம், அந்த பகுதியை சேர்ந்தவர்களை மெய்சிலிர்க்க செய்தது. மேலும் இந்த சம்பவம் பரபரப்பாக அங்கு பேசப்பட்டது.