‘எனது மகளுக்கு எதாவது நடந்தால் அரசே பொறுப்பு’ – தாய் உருக்கம்!

” காணாமல் போயுள்ள எனது பிள்ளையை கண்டுபிடித்து தாருங்கள். பிள்ளைக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே முழப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.”

இவ்வாறு கடந்த டிசம்பர் 07 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ள சிறுமியின் தாயாரான மூதுரைச் சேர்ந்த ந. ஜீவசரோஜினி தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்று நடந்த ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தரம் 8இல் கல்விகற்று வந்த எனது மகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி காணாமல் போயிருந்தார். இது தொடர்பாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் மறுநாள் 8ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தேன். எனினும் ஒரு மாதத்திற்கு மேலாகியும் எனது மகளை பொலிசார் இன்னும் கண்டுபிடித்துத் தரவில்லை. இது தொடர்பாக திருகோணமலையில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்திருக்கின்றேன். எனினும் எவ்வித பலனும் இல்லை.

எனது மகள் வகுப்பில் முதலாவது பிள்ளையாகத்தான் வருவார் நல்ல கெட்டிக்காரி அவரை பல இடங்களிலும் நாங்களும் தேடிப் பார்த்தோம் காணவில்லை. ஒவ்வொரு நாளும் செய்திகளைப் பார்க்கின்றபோது எனக்கு பயமாக இருக்கின்றது. எனது பிள்ளையை எப்படியாவது கண்டுபிடித்துத் தாருங்கள் என பொறுப்பான அனைத்து தரப்பினரிடமும் மன்றாட்டமாக கேட்டுக்கொள்வதாகவும் எனது பிள்ளைக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே முழப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.” – என்றார்.

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமி காணாமல் போயுள்ளதாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் பெற்றோரினால் 08.12.2021 அன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அச்சிறுமி கண்டுபிடிக்கப்படாத நிலையில் சிறுமியின் தாயாரினால் ஊடக சந்திப்பொன்று நேற்று (11) மதியம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles