என்னை சிறை வைத்தாலும் அறிக்கை இன்று வெளியாவது உறுதி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் இரு விசாரணை அறிக்கைகளையும் தான் இன்று வெளியிடவுள்ளதாக பிவிருது ஹெல உறுமயவின் தலைவர், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மீண்டும் அறிவித்துள்ளார்.

தன்னை கைது செய்து சிறை வைத்தால்கூட, ஏ.ஐ. தொழில்நுட்பம் உட்பட நவீன தொழில்நுட்பம் ஊடாக அறிக்கைகளை வெளியிடுவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்படாமல் இருக்கும் இரு அறிக்கைகளையும் வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு நான் வழங்கி இருந்த கால அவகாசம் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைகின்றது.அவர் அறிக்கைகளை வெளியிடாவிட்டால் அவற்றை நிச்சயம் நான் வெளியிடுவேன்.

அறிக்கைகளை வெளியிடுவது தொடர்பில் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. கைது செய்யப்படுவது பற்றியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எமக்கும் சிறந்த சட்டத்தரணிகள் ஆலோசனைகளை வழங்கிவருகின்றனர். அரச இரகசிய சட்டத்தின்கீழ் 14 வருடங்கள்வரைக்கூட சிறை தண்டனை விதிக்கக்கூடும். எனினும், மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக நான் அந்த சவாலை ஏற்கின்றேன்.

சிலவேளை என்னை கைது செய்தால்கூட, பாகிஸ்தானில் சிறைச்சாலையில் இருந்து ஏஐ தொழில்நுட்பம் ஊடாக இம்ரான் தேர்தலை வழிநடத்தியதுபோல, நவீன தொழில்நுட்பம் ஊடாக அறிக்கைகளை நான் வெளியிடுவேன். சிறை வைக்கப்பட்hடல்கூட அறிக்கை எப்படியும் வெளிவரும். அதனை எவராலும் தடுக்க முடியாது.” – என்றார்.

Related Articles

Latest Articles