மனித மாமிசம், வேட்டை இறைச்சி, கஞ்சா, மலேரியா நோய் போன்ற பல்வேறு தீயவிடயங்களுக்கெல்லாம் பெயர் பெற்றிருந்த எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை இப்பிரதேச பிக்குகள் பெளத்த சமூகத்தின் ஒத்துழைப்புடன் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் மீட்டெடுத்தோம். எனவே இப் பிரதேசத்தில் மீண்டும் கஞ்சாவைப் பயிர் செய்து எமது பிரதேசத்தினை நாசமாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என ராமன்ய நிகாயவின் தென்பகுதி சங்கநாயக்கர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் கஞ்சா பயிர்செய்யப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்படும் கருத்து குறித்து தகவல் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எமது பாரம்பரிய பிரதேசத்தில் 10,000 ஏக்கரில் கஞ்சா செய்கை மேற்கொள்ளவுள்ளதாக ஆயுர்வேதத்துறை அமைச்சர் கூறுகிறார். இவ்விடயத்துக்கு இப்பிரதேச பிக்குகளோ பெளத்த மக்களோ ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
1970 களில் பல்வேறு இழிவான செயல்களுக்கும் பெயர்பெற்ற எமது பிரதேசத்தின் இழி பெயரை மாற்றியமைத்த எங்களுக்கு கஞ்சாவை மீண்டும் பிரபல்யப்படுத்த அனுமதிக்க முடியாது.
கஞ்சா மூலம் வருமானத்தை விட சீரழிவுகளையே அதிகம் சந்திக்க நேரிடும். கஞ்சாவை ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்ட முயற்சிப்போர் அதைவிட வருமானம் தரக்கூடிய மூலிகைகளை ஏன் பயிர்செய்வதில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.










