எம்.எம்.வி.பி. வைரஸ் தொடர்பில் அரசாங்கம் விழிப்பாகவே இருக்கின்றது எனவும், இலங்கையில் தொற்றாளர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர் இது தொடர்பில் கூறியவை வருமாறு,
” இது தொடர்பில் (எம்.எம்.வி.பி. வைரஸ்) நாம் விழிப்பாகவே இருக்கின்றோம். ஜனாதிபதியுடன் அவதானம் செலுத்தியுள்ளார். தொற்றுநோய் விஞ்ஞான பிரிவும் தேவையான அறிக்கைகளை வழங்கிவருகின்றது.
எனினும், இந்த வைரஸ் தொடர்பில் சில ஊடகங்கள் போலியான தகவல்களை பரப்பிவருகின்றன. இதற்கு முன்னர் என்ற வசனத்தை வெட்டிவிட்டு, தற்போது வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொறுப்பற்ற விதத்தில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையில் 20 இடங்களில் பரிசோதனை ஏற்பாடுகள் உள்ளன. வைரஸ் தொற்று அறிகுறிகளைக்கொண்ட ஒருவரை சோதித்தோம். ஆனால் வைரஸ் தொற்று அவருக்கு இல்லை. நாம் உண்மையை மறைக்கவில்லை. உரிய தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படும்.” – என்றார்.