” நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமை பற்றி மக்கள் கேள்வி எழுப்புவதே முறைமை மாற்றத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை சிறந்த இடத்துக்க தேசிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ளது.” – என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வு பிரிவில் நேற்று முறைப்பாடொன்றை தாக்கல் செய்த பின்னர் அது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் கூறியவை வருமாறு,
” நாடாளுமன்ற இணையத்தளத்தில் எனது பெயர் கலாநிதி ஹர்ஷன என பெயரிடப்பட்டிருந்தது. அது தொடர்பில் என்னால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து நீக்கப்பட்டது. இது தொடர்பில் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தால் மன்னிப்பும் கோரப்பட்டிருந்தது.
எனினும், இந்த சம்பவத்தை பயன்படுத்தி எனக்கு எதிராக தீவிர பிரச்சாரம் முன்னெடுக்கபபட்டிருந்தது. நான் 25 வருடங்களாக சட்டத்தரணியாக செயற்பட்டுள்ளேன். ஒருபோதும் எனது பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டத்தை பயன்படுத்தியது கிடையாது.
எனவே, எப்படி கலாநிதி என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டது? என்னை அகௌரவத்துக்குட்படுத்துவதற்காகவும், எனது அரசியல் இயக்கம்மீதான நம்பிக்கையை சீர்குலைப்பதற்காகவும் எவரேனும் போலியான தகவலை உள்ளடக்கியுள்ளனரா என்ற சந்தேகம் எழுகின்றது.
அதனால்தான் இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு சிஐடியில் முறைப்பாடு செய்துள்ளேன். எவ்வாறு இந்த தவறு நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியென்பது தூய்மையான அரசியல் இயக்கமாகும். மக்கள் இன்று கல்வித் தகைமை பற்றி கேள்வி எழுப்புகின்றனர். இதுதான் சிறந்த மாற்றம். ஏனெனில் இதற்கு முன்னர் பார் பேமீட் பற்றிதான் பேசப்பட்டது. கப்பம் கோருபவர்கள், மண் கடத்துபவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். ஆனால் இன்று கல்வித் தகைமை பற்றி கருத்தாடல் இடம்பெறுவது பெருமையளிக்கின்றது.” – என்றார்.










