வடக்கு நைஜீரியாவில் பெற்றோல் ஏற்றிச் செல்லும் டாங்கர் விபத்துள்ளாகி வெடித்ததில் எரிபொருளை எடுக்க முயன்ற 147 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த டாங்கர் கானோவிலிருந்து வடக்கே யோபே மாநிலத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, மஜியா நகருக்கு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை அது இழந்தது. அப்போது டாங்கர் கவிழ்ந்து எரிபொருளைக் கொட்டியது. கிராம மக்கள் கசிந்த பெற்றோலை எடுக்க முற்பட்டதால், அப்பகுதியில் தீ பரவிய இந்த அனர்த்தம் நிகழ்ந்தது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் உள்ளுர் நேரப்படி புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சமீப காலங்களில் ஏற்பட்ட மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
பிராந்தியத்தில் உள்ள தேசிய அவசரகால மேலாண்மை அமைப்பின் தலைவர் நுரா அப்துல்லாஹி செய்தியாளர்களிடம் கூறுகையில் 140 பேர் புதன்கிழமை வெகுஜன புதைகுழியில் புதைக்கப்பட்டதாகவும் மீதமுள்ள சிலர் மற்ற இடங்களில் புதைக்கப்பட்டதாகவும் கூறினார்.
நைஜீரியாவில் 2020 ஆம் ஆண்டில் 1,500 இற்கு மேற்பட்ட எரிபொருள் டேங்கர் விபத்துக்களில 535 பேர் இறந்ததாக அறியப்படுகின்றது.