நாட்டின் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார்.
பாராளுமன்றத்தில் 225 பேரும் பிரிந்து நின்று ஒருவரையொருவர் விரல் நீட்டி செயற்பட்டு மக்கள் எதிர்பார்க்கும் எதனையும் மேற்கொள்ள முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் கொள்வனவு பெரும் சவாலாகியுள்ள நிலையில் மாதாந்தம் எரிபொருள் கொள்வனவுக்காக 500 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் 8ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ள எரிபொருள் கப்பலுக்கான நிதியை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நெருக்கடி நிலைமைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள். உரிய தீர்வுகளை உரிய காலத்தில் எடுக்காமையும் இந்த நெருக்கடிக்கு காரணமாகும்.
எரிபொருளை ஆடர் செய்வதும் அமைச்சர் அல்லது பிரதமரின் வேலையென அவர்கள் நினைக்கின்றனர்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் வரை எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன – எனவும் அவர் கூறினார்.
