நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்றும் பண்டிகை காலங்களில் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான எவ்வித அவசியமும் இல்லை எனவும் நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சந்தைவாய்ப்பு தொடர்பில் இடம்பெற்ற மறுஆய்வு கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அரிசி, தேங்காய், பால்மா, மீன், இறைச்சி, முட்டை, பருப்பு மற்றும் தானிய வகை, பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம், கிழங்கு, மரக்கறி மற்றும் பழங்கள் போன்றே எரிவாயு நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்குவது தொடர்பில் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டது.
கொவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் விநியோகச் வலையமைப்பு சீர்குலைதல், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் விலையை அதிகரிக்க எரிவாயு நிறுவனங்கள் கோரியுள்ளமை என்பன தொடர்பிலும் வர்த்தக அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தன அவர்கள் இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தினார்.
இதன்போது மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் அறிக்கையை முன்வைத்து, கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் உலகப் பொருளாதாரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதாக சுட்டிக்காட்டினார். அத்துடன், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும் என்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
அதற்கமைய உள்ளூர் விவசாயத்தின் வளர்ச்சி மற்றும் உள்ளூர் வணிகங்களை வலுப்படுத்துதல் பொருட்களின் ஏற்றுமதியில் கவனம் செலுத்துவதன் மூலம் அந்நிய செலாவணியை சம்பாதிக்க வேண்டியது அவசியம் என மத்திய வங்கி பிரதிநிதிகள் விளக்கினர்.
இலங்கை சுங்க திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட சுமார் 3,000 மெட்ரிக் டொன் அரிசியை சதொச ஊடாக பொதுமக்களுக்கு விநியோகிக்க ஒரு திட்டத்தை வகுக்க முடியுமா என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்கள் வினவினார்.
நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல அவர்கள் அதற்கு ஒப்புதலளித்ததுடன், இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஜி.வி.ரவிப்ரியவுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான அரிசி பங்குகளை சந்தைக்கு விடுவித்தல் மற்றும் மேலும் 25,000 மெட்ரிக் டொன் அரிசியை உள்ளூர் வியாபாரிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டில் அரிசி தட்டுப்பாடு இல்லை என தெரிவித்த பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ , உள்ளூர் நுகர்வுக்கு போதுமான அரிசி நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், புத்தாண்டு காலத்தில் காய்கறி விலை குறையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.