” எனது தந்தை 1989 இல் நங்கூர சின்னத்தில் போட்டியிட்ட போதும் 199இல் சுயேட்சையாக மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்ட போதும் மலையக அரசியலில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தினார் அவரது துணிவான கொள்கைகளும் மக்களின் தெளிவான ஆதரவுமே அதற்கு காரணம் என்று மலையக மக்கள் முன்னணியின் பிரதிசெயலாளர் நாயகமும் சட்டத்தரணியும் கோடரி சின்ன சுயேட்சை வேட்பாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.
” தனது ஒரு வாக்கினால் இலங்கை அரசியலையே தீர்மானித்த என் தந்தையின் வழியிலும் அதே உணர்வோடு மாற்றத்தை நோக்கி பயணிக்க காத்திருக்கும் என் சகோதர சகோதரிகள் நண்பர்கள் தந்தையின் விசுவாசிகளின் ஆதரவோடும் இம்முறை நான் நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமல்ல மலையக அரசியலிலும் நிச்சயமாக ஒரு மாற்றத்தினை பேரிடியாக ஏற்படுத்துவேன்.
இனவாதிகளின் நெருக்கடி பாதுகாப்பு துறையினரின் கெடுபிடி மலையக தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு தோட்ட நிர்வாகத்தின் பழி வாங்கல் அனைத்துக்கும் எதிராக தனிநபராக போராடி எம் மண்ணின் பெருமையையும் எம் மக்களின் அடையாளத்தையும் சர்வதேசத்துக்கு அடையாளம் காட்டினார்.
அவரது கொள்கையின் வாரிசாக இன்று ஒரு பெண்ணாக தனிநபராக எம்மக்களுக்காக நானும் களமிறங்கியுள்ளேன்.
எத்தனை முனைகளிலிருந்தும் எப்படியான எதிர்ப்புகள் வந்தாலும் மக்கள் சக்தியாலும் என் தந்தை போதித்த மன வலிமையாலும் அதனை உடைத்தெறிவேன் என் வெற்றியின் மூலம் மலையகம் மீண்டும் சுவாசக் காற்றை சுவாசிக்கும் நம்பிக்கையை இளைய தலைமுறைக்கு ஏற்படுத்துவேன். மலையகத்திலிருந்து நாம் மேற்கொள்ளும் நமது அரசியல் அபிவிருத்தியினுடாக எம்மவரை சர்வதேசம் திரும்பிப் பார்க்கச் செய்வேன்.” – என்றார்.