நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கைத்தொழிற்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டமையை அடுத்து எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அவருக்கு ஆளும் தரப்பின் முன்வரிசை ஆசனத்தை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்ட திலும் அமுனுகமவுக்கு, சரத் வீரசேகரவுக்கு அருகில் ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து அவர்களது சிரேஷ்டத்துவம் அடிப்படையில் நாடாளுமன்றில் ஆசனங்களை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இதேவேளை, இராஜாங்க அமைச்சராக மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட அருந்திக்க பெர்னாண்டோவின் ஆசனத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.










