” நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், வரலாற்றில் முதல் தடவையாக கரட் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.” – என்று நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும் அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார நிலையத்தின் ஆலோசகருமான அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அத்துடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம்வரை மரக்கறி விலை குறைவதற்கான சாத்தியம் இல்லை எனவும் அவர் கூறினார்.
நுவரெலியா மத்திய பொருளாதார காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் கடந்த வருட இறுதியில் பெய்த கடும் மழை காரணமாக அதிகமான பிரதேசங்களில் ஏராளமான மரக்கறி வகைகள் அழிவடைந்துள்ளன. இதன் காரணமாகவே நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார நிலையங்களிலும் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
அத்துடன், நுவரெலியா பிரதேச விவசாயிகளிடம் இருந்து கடந்த ஓரிரு நாட்களாக கரட் கொள்வனவு செய்யப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட கரட் சரியான தரம் வாய்ந்ததாக இல்லை. அதிக விலை காரணமாக முன்கூட்டியே அறுவடை இடம்பெறுகின்றது.
கடந்த காலங்களில் நுவரெலியா மத்திய பொருளாதர நிலையத்தில் இருந்து ஏனைய வெளி மாவட்டங்களில் உள்ள பொருளாதார நிலையங்களுக்கு நாளொன்றுக்கு 35 ஆயிரம் கிலோ கரட் அனுப்பட்டது. ஆனால் தற்போது அந்த அளவு குறைவடைந்து, நாளொன்றுக்கு ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் அளவிலே அனுப்படுகின்றது. இதனால் மத்திய நிலையத்தில் தொழில் புரிந்த 200 இற்கும் அதிகமானவர்கள் தற்போது தொழில் இழந்து நடுவீதியில் நிற்கின்றனர்.
இதுபோலவே ஏனைய மரக்கறி வகைகளும் சீரற்ற கால நிலை ஏற்பட்டு அழிவடைந்த காரணத்தால் அவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு அதிக விலைகளுக்கே விற்பனை செய்யப்படுகின்றது. அவைகளும் சிறந்த தரத்தில் இல்லை என்பதும் உண்மையான விடயம்.” – என்றார்.
நானுஓயா நிருபர்










