ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் அக்கட்சியின் ஆதரவாளர்களை தம்பக்கம் வளைத்துப்போடும் முயற்சியில் இறங்கியுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இதற்காக ‘பச்சை ஒளி’ (கொல எலிய) எனும் அமைப்பையும் உருவாக்கியுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அக்கட்சியின் உறுப்பினரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்த தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டதன் பலனாக அக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர் எம்முடன் இணைந்துவருகின்றனர். மாவட்ட மட்டத்திலும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பரந்தப்பட்ட கூட்டணி அமைத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழைப்பு விடுத்ததால் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவர்களை நாம் பாதுகாப்போம். தற்போது ‘கொல எலிய’ (பச்சை ஒளி) எனும் அமைப்பை உருவாக்கியுள்ளோம். ஐக்கிய தேசியக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் இவ்வமைப்பில் இணைந்துள்ளனர். ஏனையோருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
அதேவேளை, புதிய கருத்து கணிப்பின் பிரகாரம் 139 ஆசனங்களை நாம் வெல்வது தற்போது உறுதியாகியுள்ளது. இனிவரும் நாட்களில் நிலைமைமாறும். எனவே, மூன்றிலிரண்டுக்கு அப்பால் பெறுவோம். ” – என்றார்.