சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் முன்நிகழ்வில்லாதவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று இந்த ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசை வென்ற நவி பிள்ளை (Navi Pillay) சாடியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான நவி பிள்ளைக்கு, “அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காகவும்”, அது ஒரு “விரிவான உலகளாவிய சட்ட ஒழுங்கிற்கு” வழிவகுத்ததற்காகவும் வெள்ளிக்கிழமையன்று நோபல் பரிசு வழங்கப்பட்டதாக நோபல் கமிட்டி தெரிவித்தது.
இந்தத் தேர்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அதிருப்தியை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே அமெரிக்கா , சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராகப் பரந்த அளவிலான தடைகளை அறிவித்தது.
இந்த நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சி மற்றும் சர்வதேச சட்ட ஒழுங்கின் அடித்தளத்தின் மீதான தாக்குதல் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூறியுள்ளது.
சனிக்கிழமையன்று ஆஸ்லோவில் உள்ள நோபல் அமைதி மையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் காணொளி வாயிலாகப் பேசிய நவி பிள்ளை, “சர்வதேச நீதிமன்றங்கள், முக்கியமாக நெதர்லாந்தின் தி ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தொடர்ச்சியான இருப்பு குறித்து அதிக பதற்றமும் கவலையும் நிலவுகிறது.
“மிக முக்கியமாக, ஒரு நாடு நீதிபதிகள் பிறப்பிக்கும் நீதித்துறை உத்தரவுகளுக்காக மட்டுமே அவர்களுக்கு எதிராகத் தடைகளை அறிவித்துள்ளது. இது நடைமுறையில் இல்லாத ஒன்று, ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறினார்.
