பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி தேர்தலின்போது உறுதியளித்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அந்த உறுதிமொழியைமீறும் வகையிலேயே தேசிய மக்கள் சக்தியினரின் அறிவிப்புகள் அமைந்துள்ளன என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்திடம் அநுர அரசு மண்டியிட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு,
‘ ஜனாதிபதி தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தன. அவை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் மக்களும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களித்திருந்தனர்.
6 மாதங்களுக்கு ஒரு தடவை அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மாறுபட்ட கதையைக் கூறுகின்றனர். திறைசேரியில் பணம் இல்லையாம். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். தற்போது அவ்வாறு முடியாது எனக் கூறுகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலின்போது தான் வழங்கிய வாக்குறுதிகள் போலியானவை அல்ல என்பதை ஜனாதிபதி நிரூபிக்க வேண்டும். மின் கட்டணத்தை மூன்றிலிரண்டு பங்களால் குறைத்து இதனை நிரூபிக்க முடியும். மின் கட்டணத்தை குறைப்பதற்கு நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் தேவையில்லை.
ஜனாதிபதி தேர்தலில் நான் வென்றிருந்தால் மின்கட்டணத்தை நிச்சயம் குறைத்திருப்பேன். மின் கட்டணத்தை ஏன் 66 சதவீதத்தால் அநுரவால் குறைக்க முடியவில்லை? எரிபொருள் விலையை ஏன் கணிசமானளவு குறைக்க முடியவில்லை? நியாயமான விலையில் ஏன் அரிசியை வழங்க முடியவில்லை. பொருட்கள் விலை அதிகரித்து, மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளது.
வற் வரி குறைக்கப்படும் என்றார்கள், ஐஎம்எப்பிற்கு பயம் இல்லை எனவும் சூளுரைத்தார்கள். ஐஎம்எப் என்ன சொன்னாலும் வரி குறைக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இன்று ஐஎம்எப்பிடம் மண்டியிட்டுள்ளனர்.” – என்றார்.










