” போர் முடிவடைந்த பின்னர் இலங்கை தொடர்பில் போலியான அறிக்கையையே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை முன்வைக்கின்றது. எனவே, அந்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிராகரித்தமையால் பெருமை அடைகின்றோம்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரான சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” போரை மஹிந்த ராஜபக்ச முடிவுக்கு கொண்டுவந்த பின்னர், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, பொய்யான காரணங்களை உள்ளடக்கிய அறிக்கையையே வெளியிட்டுவருகின்றது. இதனை நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டி இருந்தோம். எதிரணியில் அப்போது இருந்த தலைவர்கள் இதனை ஏற்கவில்லை. எனினும், ஜனாதிபதி தற்போது அந்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளமையை இட்டு நாம் பெருமை அடைகின்றோம்.
நாடுமீது பற்று இல்லாமல், அதிகாரத்துக்காக அலையும் தரப்புகளே இலங்கை தொடர்பில் மேற்குலக நாடுகளுக்கு போலியான தகவல்களை வழங்கி நாட்டை இரண்டாம் தரத்துக்கு தள்ள முற்படுகின்றன. புலிகள் காலத்தில், எமது நாட்டுக்கு சர்வதேச ரீதியில் களங்கம் ஏற்படுத்துவதற்காக புலிகளால் போலியான தகவல்கள் வழங்கப்பட்டன. அதன்பின்னர் வடக்கில் உள்ள சில தமிழ்க் கட்சிகள் அந்த வேலையை செய்துவருகின்றன. ஜே.வி.பியும் அவ்வாறு செயற்படுகின்றது.” – என்றார்.










