ஐ.பி.எல். வெற்றி மகுடம் யாருக்கு? மும்பை, டெல்லி இன்று பலப்பரீட்சை!

ஐ.பி.எல். மகுடத்தை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்றிரவு அரங்கேறுகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன.

4 முறை (2013, 2015, 2017, 2019) கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 2010-ஆம் ஆண்டில் மட்டுமே இறுதிப்போட்டியில் தோல்வியை (சென்னையிடம்) சந்தித்தது. மற்றபடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற எல்லா தடவையும் வெற்றி வாகை சூடி அசத்தி இருக்கிறது.

இம்முறை தொடரில் 9 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததுடன் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பையின் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக விளங்குகிறது.

8 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்த டெல்லி அணி தொடரின் தொடக்கத்தில் வீறு நடைபோட்டது. ஆனால் தற்போது சற்று தடுமாறுகிறது. முதலாவது தகுதி சுற்று உள்பட கடைசி 6 ஆட்டங்களில் 5-ல் தோல்வியை சந்தித்த அந்த அணி 2-வது தகுதி சுற்றில் ஐதராபாத்துக்கு ஆப்பு வைத்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

நடப்பு தொடரில் 2 லீக் ஆட்டங்களிலும் முறையே 5 விக்கெட் மற்றும் 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை பந்தாடிய மும்பை அணி முதலாவது தகுதி சுற்றிலும் 57 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணிக்கு எதிராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை அணியே இறுதிப்போட்டியிலும் கோலோச்ச அதிக வாய்ப்பு இருக்கிறது.

மும்பைக்கு எதிரான 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு இருக்கும் டெல்லி அணி அதற்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

அதிக முறை கோப்பையை வென்று இருக்கும் மும்பை அணி 5-வது முறையாக மகுடம் சூடி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுமா? அல்லது முதல்முறையாக கோப்பையை வென்று நீண்ட நாள் தாகத்தை தீர்த்து டெல்லி அணி சரித்திரம் படைக் குமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

Related Articles

Latest Articles