ஒக்டோபரில் இலங்கையர் தினம்: நடவடிக்கை ஆரம்பம்!

நல்லிணக்கத்தை பிரதான இலக்காகக்கொண்ட இலங்கையர் தினம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது எனவும் இதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுகள் நிறைவடைந்துள்ளன எனவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” இனம், மதம், குல பேதங்கள் இன்றி இலங்கையராக இவ்விழாவை நாம் கொண்டாடமுடியும். இலங்கையில் முதன்முறையாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இது நடைபெறும்.

தலைநகரில் நான்கு வலயங்கள் பிரிக்கப்பட்டு, விழாவை எப்படி நடத்துவது, வடக்கு, கிழக்கு மற்றும் வெளிநாடுகளில் இருந்து இதற்கு பெறக்கூடிய தொடர்பு, போக்குவரத்து உட்பட எல்லாவித காரணங்கள் பற்றியும் பேசப்பட்டுள்ளன.

இவ்விழாவின்கீழ் நல்லிணக்கத்துக்குரிய வேலைத்திட்டம் உட்பட பல திட்டங்கள் உள்ளன. அவை தொடர்பில் மக்களுக்கு விரைவில் தெளிவுபடுத்தப்படும். இலங்கையர் நாள் என்ற விழாவில் பங்கேற்பதற்கு வெளிநாட்டிலுள்ளவர்களும் ஆர்வமாக உள்ளனர்.

வடக்கு மக்கள் எமக்கு வழங்கியுள்ள ஆணையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளோம்.  காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு , அரசியல் கைதிகள் விடுதலை,   மொழிப் பிரச்சினைக்கு தீர்வு, நம்பிக்கையை ஏற்படுத்தல் போன்ற விடயங்களையும் செய்ய வேண்டும். அப்போதுதான் நல்லிணக்கம் ஏற்படும். இதனை நோக்கிய பயணத்தின் ஓர் அங்கமாக இலங்கையர் நாள் அமையும்.” – என்றார்.

Related Articles

Latest Articles