அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை கைது செய்து, சிறையில் அடைப்பது போன்ற ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ வை, தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
‘யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் கிடையாது’ என துவங்கும்படி அந்த வீடியோ உள்ளது.
அதில், முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா, ஜோ பைடன் உள்ளிட்ட பலரும் இந்த வாசகத்தை கூறுகின்றனர்.
ஒரு கட்டத்தில், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திலேயே அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் ஒபாமாவுக்கு கைவிலங்கிடுகின்றனர்.
இதைப் பார்த்து ஜனாதிபதி டிரம்ப் சிரிப்பது போலவும், பின்னர் கைதிகளுக்கான ஆரஞ்சு நிற உடையில் ஒபாமா சிறையில் இருப்பது போன்றும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவை, டிரம்ப் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஒபாமாவை, மிகப் பெரிய தேர்தல் மோசடிக்காரர் என டிரம்ப் கடந்த வாரம் விமர்சித்துஇருந்தார்.
ஒபாமா தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசியலுக்காக உளவுத்துறையை பயன்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாகவே பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற ஏ.ஐ., வீடியோவை டொனால்டு டிரம்ப் பகிர்ந்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பலர், டிரம்ப் பொறுப்பில்லாதவர் என விமர்சித்து வருகின்றனர்.