ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் – டெவாட்டியா அதிரடி!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அசத்திய ராகுல் டெவாட்டியாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது.

முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் சதமடித்து அசத்தினார். கே எல் ராகுல் அரை சதமடித்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 223 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 224 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து, ஐ.பி.எல். வரலாற்றில் அதிகப்படியான ஸ்கோரை சேஸிங் செய்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.

ஸ்மித் (50), சஞ்சு சாம்சன் (85) ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியை நோக்கி சென்றது.

கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணிக்கு 51 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த ஓவரை ராகுல் டெவாட்டியா எதிர்கொண்டார்.

முதல் நான்கு பந்திலும் இமாலய சிக்சர் விளாசினார். இதனால் ஆறு பந்தில் ஆறு சிக்ஸ் அடிப்பாரா? என்ற ஆர்வம் எழுந்தது. ஆனால் ஐந்தாவது பந்து பேட்டில் படவில்லை. 6-வது பந்தை மீண்டும் ஒருமுறை எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்பினார். ஒரே ஓவரில் ஐந்து சிக்சர்கள் அடித்து அசத்தினார் டெவாட்டியா.

இறுதியில், ராஜஸ்தான் அணி 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்து சாதனை வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்த ராகுல் டெவாட்டியாவுக்கு முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

https://www.iplt20.com/video/209477/5-sixes-1-over-a-tewatia-special 

Related Articles

Latest Articles