‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் முதலாவது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
மேற்படி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இக்கூட்டம் முடிவடைந்த பின்னர், அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பதை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கற்றாராய்ந்து, அதற்கான
சட்டவரையை தயாரிப்பதற்காகவும், இது விடயம் தொடர்பில் நிதி அமைச்சால் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள
சட்டவரைவுகள் மற்றும் திருத்தங்களை கற்றாராய்ந்து அவற்றில் திருத்தங்கள் இருப்பின் அதற்கான
முன்மொழிகளை முன்வைப்பதற்காகவுமே குறித்த செயலணி அமைக்கப்பட்டுள்ளது.
13 பேரடங்கிய இந்த செயலணியின் தலைவராக ஞானசார தேரரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி
சேனாநாயக்க செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி செயலணியானது மாதம் ஒரு முறை ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், 2022 பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பணிக்கப்பட்டுள்ளது.