ஒரே நாளில் 2.36 பில்லியன் டொலர்! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த GTA 6

 

13 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின்னர் வியாழக்கிழமை வெளியான Grand Theft Auto 6 (GTA 6), வரலாற்றில் மிகப்பெரிய பொழுதுபோக்கு வெளியீடாக உருவெடுத்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரபலமான இந்த வீடியோ கேம் வெளியான முதல் நாளிலேயே முன்பதிவுகள் மற்றும் விற்பனை மூலம் 24.5 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 2.36 பில்லியன் டொலர் (1.8 பில்லியன் பவுண்டுகள்) வருமானம் ஈட்டியுள்ளதாகவும் சந்தை ஆய்வு நிறுவனமான Sensor Tower மதிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை அதிக வசூல் செய்த திரைப்படமாகக் கருதப்படும் Spider-Man: Brand New Day, திரையரங்குகளில் தனது முழு வெளியீட்டுக் காலத்திலும் 2.5 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டியதாகக் கூறப்படும் நிலையில், GTA 6 ஒரே நாளில் அதற்கு நெருக்கமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக இந்த மதிப்பீடு தெரிவிக்கிறது.

GTA 6-ஐ உருவாக்கிய Rockstar நிறுவனமும் அதன் தாய் நிறுவனமான Take-Two நிறுவனமும் விளையாட்டின் விற்பனை விபரங்களை இதுவரை வெளியிடவில்லை. எனினும், அதன் மீதான கேள்விக்கிடமற்ற ஆர்வம் முன்னெப்போதும் இல்லாத வகையில் காணப்படுவதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் மூன்று தசாப்தங்களாக வளர்ந்து வந்த Rockstar நிறுவனத்தின் குற்றச் செயல்களை மையமாகக் கொண்ட வீடியோ கேம் தொடரின் புதிய அத்தியாயமாக GTA 6 வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கனவுகள் மற்றும் சமூக யதார்த்தங்களை நையாண்டியாக வெளிப்படுத்தும் இந்த விளையாட்டு, லியோனிடா எனப்படும் புளோரிடாவை அடிப்படையாகக் கொண்ட கற்பனை மாநிலத்தில் குற்றவாளிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது.

GTA 6-இல் லூசியா மற்றும் அவரது காதலர் ஜேசன் ஆகிய இரு புதிய கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். சிறிய அளவிலான குற்றங்களில் ஈடுபடும் இவர்களை மையமாகக் கொண்டு விளையாட்டின் கதை நகர்கிறது.

இந்த விளையாட்டை உருவாக்குவதற்கு 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான செலவு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம் வரலாற்றிலேயே அதிக செலவில் உருவாக்கப்பட்ட வீடியோ கேமாக GTA 6 உருவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், GTA 6 வெளியாகியுள்ளதால், ஏனைய தனிநபர் விளையாட்டுகளில் (Single-player games) வீரர்கள் செலவிடும் நேரம் 10 சதவீதத்தால் குறையக்கூடும் என Sensor Tower கணித்துள்ளது.

மில்லியன் கணக்கான பயனர்களின் மின்னஞ்சல் ரசீதுகள், புள்ளிவிபரத் தரவுகள் மற்றும் PlayStation, Xbox போன்ற முக்கிய விளையாட்டு தளங்களின் பொதுவான பயனர் விபரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

GTA 6 விற்பனையில் சுமார் 75 சதவீதம் PlayStation 5 தளத்திலும், எஞ்சிய விற்பனை Xbox தளத்திலும் இடம்பெற்றுள்ளதாக Sensor Tower குறிப்பிட்டுள்ளது.

விளையாட்டுச் சந்தை ஆய்வு நிறுவனமான Niko Partners, GTA 6 இந்த ஆண்டில் உலகளாவிய ரீதியில் 3 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டும் என எதிர்பார்க்கிறது.

இந்த வருமானம், GTA 6-ஐ உலகின் அதிக வருமானம் ஈட்டிய பொழுதுபோக்கு வெளியீடுகளில் ஒன்றாக நிலைநிறுத்தும். இருப்பினும், பணவீக்கத்திற்கு ஏற்ப கணக்கிடப்பட்ட சுமார் 4.5 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டிய 1939ஆம் ஆண்டு வெளியான Gone with the Wind திரைப்படத்தின் சாதனையை எட்டுவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.

GTA 6 மூலம் Rockstar நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளிலும் அதிக வருமானத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணினிகளுக்கான (PC) பதிப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்தோ, இணையம் வழியாக வீரர்கள் ஒன்றிணைந்து விளையாடக்கூடிய Multiplayer விரிவாக்கம் குறித்தோ Rockstar நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை.

2013ஆம் ஆண்டு வெளியான GTA 5-ஐ முன்னுதாரணமாகக் கொண்டால், Multiplayer வசதி விளையாட்டின் நேரத்தை மேலும் பல மணிநேரங்கள் நீட்டிப்பதுடன், விளையாட்டுக்குள் வீடுகள், வாகனங்கள் மற்றும் ஏனைய சிறப்பு வசதிகளை உண்மையான பணம் செலுத்தி வாங்குவதன் மூலம் Rockstar நிறுவனத்திற்கு கூடுதல் வருமானத்தையும் பெற்றுக்கொடுக்கும்.

13 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெளியீடு தாமதமான நிலையில், GTA 6 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. சில விமர்சகர்கள் இதனை இதுவரை உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த விளையாட்டு அனுபவங்களில் ஒன்றாகப் பாராட்டியுள்ளனர். பொழுதுபோக்கு ஊடகமான IGN, இதனை மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தலைசிறந்த படைப்பு என வர்ணித்துள்ளது.

வியாழக்கிழமை நள்ளிரவில் வெவ்வேறு நேர வலயங்களில் GTA 6 வெளியானதைத் தொடர்ந்து, பல வீரர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து விளையாடியதுடன், சிலர் விளையாடுவதற்காக அடுத்த நாள் விடுமுறையும் எடுத்துள்ளனர்.

GTA 6-ஐ பதிவிறக்கம் செய்வதற்காக வீரர்கள் ஒரே நேரத்தில் இணையத்தைப் பயன்படுத்தியதால், Virgin Media O2 நிறுவனத்தின் மாலை நேர இணையப் பயன்பாட்டு சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டின் கோப்பு அளவு 212GB ஆகும்.

விளையாட்டில் இடம்பெறும் வன்முறை மற்றும் சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக ஜப்பானில் தணிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், முந்தைய GTA வெளியீடுகளைப் போலவே சீனாவின் பிரதான நிலப்பரப்பிலும் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles