நிலையான போர் நிறுத்தத்துக்காக எஞ்சியுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்கும் பரிந்துரையை ஹமாஸ் முன்வைத்துள்ளது.
இரண்டாம் கட்ட காசா போர் நிறுத்தம் தொடர்பான தனது திட்டத்தை வெளியிடும் வகையில் ஹமாஸ் பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
‘ நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகளை முழுமையாக வாபஸ் பெறும் உடன்பாட்டை எட்டுவதற்கான அளவுகோலுக்கு கைதிகளை ஒரே நேரத்தில் பரிமாறிக்கொள்ளும் இரண்டாம் கட்டம் ஒன்றுக்கு நாம் தயாராக உள்ளோம்’ எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பை வெளியேற்றுவது மற்றும் ஆயுதங்களை களையும் இஸ்ரேலின் அழைப்பை ஹமாஸ் நிராகரித்தது.
எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள அடுத்த கைதிகள் பரிமாற்றத்தின்போது விடுவிக்கும் பணயக்கைதிகளின் எண்ணிக்கையை மூன்றில் இருந்து ஆறாக அதிகரிக்கும் ஹமாஸின் முடிவையும் ஹமாஸ் அமைப்பின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
போர் நிறுத்த உடன்படிக்கையின் இரண்டாம் கட்டத்தை விரைவாக செயற்படுத்துவதற்கு ஹமாஸ் தலைவர் கலீல் அல் ஹய்யா முன்னதாக வலியுறுத்தி இருந்தார்.
பணயக்கைதிகள் வாரா வாரம் கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் கடந்த வாரம் கருத்து வெளியிட்டிருந்ததோடு காசாவில் பணயக்கைதிகளாக உள்ளவர்களின் குடும்பத்தினரும் அனைத்து பணயக்கைதிகளும் ஒரே தடவையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையிலேயே ஹமாஸ் இந்த பரிந்துரையை செய்துள்ளது.
இஸ்ரேலின் 15 மாத கால இடைவிடாத தாக்குதல்களில் அழிவடைந்திருக்கும் காசாவுக்கு நடமாடும் தற்காலிக இல்லங்கள் மற்றும் கட்டுமான உபகரணங்கள் செல்வதற்கு அனுமதிக்கும் முயற்சியாகவே போர் நிறுத்த உடன்படிக்கையை விரைவுபடுத்த பரிந்துரைகள் முன்வைக்கப்படுவதாக பார்க்கப்படுகிறது.