2010 ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இலங்கை அரசியலில் மஹிந்த சூறாவளியே வீசியது. அந்த அரசியல் சூறாவளியால் கட்சிகள் ஆட்டம் கண்டன. மறுபுறத்தில் மஹிந்த தரப்பு களத்தில் மையங்கொண்டு – தனக்கான இருப்பை வலுப்படுத்திக்கொண்டது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட முக்கியமான கட்சிகளுக்குள்ளும் பிரித்தாளும் அரசியல் நகர்வை மஹிந்த வெற்றிகரமாக நிறைவேற்றிவந்தார். பஸிலின் தலைமையிலேயே இதற்குரிய அரசியல் ஒப்பரேஷன் அரங்கேறியது.
கட்சி தாவல், காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு என துரோக அரசியலுக்கே உரிய அத்தனை அம்சங்களும் எதிரணியில் அரங்கேற, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் வலுவிழந்தே காணப்பட்டது.
தொடர் தேர்தல் தோல்விகளால் ஐதேக தலைமைப்பதவியில் மாற்றம் வேண்டும் என உள்ளக மோதல் உக்கிரமடைந்தது. தலைமைக் கதிரையில் ரணிலின் உடும்புப்பிடி தொடர்ந்ததால் ஐதேகமீதான கட்சி ஆதரவாளர்களின் அதிருப்தியும் உச்சம் தொட்டது.
இதற்கிடையில் சில உள்ளக புரட்சி குழுக்கள் உதயமாகின. ஆனால் ரணில் விக்கிரமசிங்க தனது தலைமைப்பதவியை தக்கவைத்துக்கொண்டார். மஹிந்த அணியும் ஆசியும் அவருக்கு இருந்தது என்பது கசப்பான உண்மையாகும்.
2012 நடுப்பகுதிக்கு பிறகு மஹிந்த தரப்பு பின்னடைவை சந்திக்க ஆரம்பித்தது. எல்லா வழிகளிலும் அரசியல் தலையிடி ஏற்பட்டது. சர்வதேசத்துடனும் முரண்பட்ட கொள்கையே பின்பற்றப்பட்டு வந்தது. எனினும், உறுப்பினர்களை விலைக்கு வாங்கியேனும் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை தக்கவைத்துக்கொண்டுவந்தனர்.
யானைபோல அமைச்சரவை பெருகிக்கொண்டே சென்றது. ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால் மக்கள் மத்தியிலும் அதிருப்தி உருவானது.
மின்சார கதிரை, ஒற்றையாட்சி, புலி என பழைய புராணங்கள் பாடப்பட்டாலும் 2013 இறுதியாகும்போது வலுவான எதிரணி இருந்தால் மஹிந்தவை வீழ்த்தலாம் என்ற நிலை உணரப்பட்டது.
அப்போதுதான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு 2014 செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க முன்வந்தார் ஹரின் பெர்ணான்டோ.
அவரின் அந்த துணிகரமான அரசியல் முடிவால் பிளவுபட்டிருந்த ஐதேகவுக்கு ஒன்றுபடுவதற்குரிய சூழல் உதயமானது. பதுளையில் ரணிலும், சஜித்தும் ஒரே மேடையில் ஏற, ஐதேக ஆதரவாளர்கள் மத்தியில் புத்தெழுச்சி ஏற்பட்டது. மஹிந்த தரப்புக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பதற்குரிய ஒரு வாய்ப்பாக அத்தேர்தலை பயன்படுத்த மக்களும் முன்வந்தனர்.
ஊவா மாகாணசபைத் தேர்தலில் 51 சதவீத வாக்குகளைப் பெற்று மஹிந்த அணி ( ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி – வெற்றிலை சின்னம்) வெற்றி பெற்றிருந்தாலும் ஐதேகவின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்தது. ஊவாவில் மஹிந்த தரப்புக்கு 19 ஆசனங்கள் கிடைக்கப்பெற ஐதேகவுக்கு 13 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. ஜே.வி.பி. சார்பில் இரு உறுப்பினர்கள் தெரிவாகினார்கள்.
எதிரணிக்கு ஊவா மண்ணில் இருந்து கிடைத்த அந்த எழுச்சிதான் 2015 இல் மஹிந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு பிள்ளையார் சுழி போட்டது எனலாம். ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கு பின்னரே மஹிந்த அணியில் இருந்து மைத்திரிபால சிறிசேன பிரித்தெடுக்கப்பட்டு, பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.
இப்போது எதற்காக இந்த பதிவு என்ற வினா எழக்கூடும்.
ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி தற்போது இடம்பெற்றுவருகின்றது.
இரு கட்சிகளும் ஒரு கட்சியாக சங்கமிக்குமா அல்லது கூட்டணியா என்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எட்பட்படவில்லை. ஆனால் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற உறுதியான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது.
ஜனநாயக நாடொன்றில் எதிரணியானது வலுவாக காணப்பட வேண்டும். அதுவும் ஆளுங்கட்சி பலமாக இருக்கும் நிலையில், எதிரணி வலுவிழந்தால் அது ஜனநாயகத்தக்கு அச்சுறுத்தல். அந்தவகையில் எதிரணி வலுவடைவது வரவேற்கக்கூடிய விடயம்.
ரணிலும், சஜித்தும் ஒரே கட்சியாகவோ அல்லது பொது கூட்டணியாகவே சங்கமித்து ஐதேக சார்பு முகாமை – வாங்கு வங்கியை வலுப்படுத்த வேண்டும் என்பதே இரு கட்சிகளின் ஆதரவாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
அடுத்த வருடம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் இரு தரப்புகளும் பொது கூட்டணியாக களமிறங்கினால் அதற்கு மக்கள் மத்தியிலுள்ள வரவேற்பை கணித்துக்கொள்ள முடியும்.
நாமலை வலுப்படுத்தும் அரசியில் நகர்வை விட்டுவிட்டு ஐதேகவும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒரு மையப்புள்ளிக்குள் வருவது நல்லது.
ஆர்.சனத்










