நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போன் தோட்டம், ஆத்தடி பிரிவில் தேயிலைத் தோட்டப் பகுதியில் கம்பி வலையில் சிக்கிய பெண் சிறுத்தையொன்று பல மணி நேரப் போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (12) தேயிலைத் தோட்டப் பகுதியில் இரைதேடி வந்த நன்கு வளர்ந்த பெண் சிறுத்தையொன்று அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கியுள்ளது.
சிறுத்தை ஆக்ரோஷமாக இருந்ததுடன், கம்பி வலையில் சிக்கியதால் அதன் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்களும் ஏற்பட்டிருந்தன. இதையடுத்து, அதனைப் பாதுகாப்பாக மீட்பதற்காக மயக்க மருந்து செலுத்தி பிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
ரந்தெனிகல கால்நடை வைத்தியசாலையின் கால்நடை மருத்துவர் பின்தெனிய மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து சிறுத்தைக்கு மயக்க மருந்து செலுத்தி பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
தேயிலைத் தோட்டத்தில் நீரோடைக்கு அருகிலுள்ள புதர்ப் பகுதியில் கட்டப்பட்டிருந்த கம்பி வலையில் சிறுத்தையின் வயிற்றுப் பகுதி சிக்கியுள்ளதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கம்பி வலையிலிருந்து தப்பிக்க முயன்றபோது சிறுத்தையின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, சிறுத்தையின் வயிற்றுப் பகுதியில் சிக்கியிருந்த கம்பி அகற்றப்பட்டது. காயமடைந்ததுடன் உடல் சோர்வடைந்த நிலையிலும் காணப்பட்ட சிறுத்தை, கூண்டில் ஏற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ரந்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், தேயிலைத் தோட்டங்கள் தற்போது அடர்ந்த காடுகளைப் போன்று காணப்படுவதால், சிறுத்தைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உருவாகியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சிறுத்தைகளுக்குத் தேவையான இரைகளும் இப்பகுதிகளில் கிடைப்பதால், தேயிலைத் தோட்டப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.










