என்பிபி அரசுக்கு நிர்வாகம் தெரியவில்லை: அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்

என்பிபி அரசுக்கு நிர்வாகம் தெரியவில்லை: அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம். அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

“சதொச நிறுவனத்தை நாம் நிர்வகித்த காலத்தில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கிடைக்கக்கூடியதாக இருந்தன. அவை குறைந்த விலையிலும் வழங்கப்பட்டன. ஆனால், இன்று சதொசவில் என்ன நடக்கின்றது? பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

திட்டமிட்ட அடிப்படையில் சாட்சியங்களை உருவாக்கி வழக்குத் தொடரும் செயற்பாடுகளையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இது தொடர்பில் நிச்சயமாக ஆராயப்பட வேண்டும்.

நாம் இந்த அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம். அரசியல் ரீதியாக முன்னெடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம்” என ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

…………………..

இலங்கையில் விமானியில்லா பயணிகள் போக்குவரத்து ட்ரோன் சோதனை ஓட்டம் வெற்றி

இலங்கையில் முதலாவது விமானியில்லா பயணிகள் போக்குவரத்து ட்ரோன் குறித்த அதிகாரப்பூர்வ செயல்விளக்கப் பறப்பு நேற்று கொழும்பு துறைமுக நகரத்தில் இடம்பெற்றுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடிதுவக்கு ஆகியோர் இந்த ட்ரோனில் பயணம் செய்து சோதித்துப் பார்த்தனர்.

இந்தச் செயல்விளக்கமானது, இலங்கையில் மின்சாரத்தால் இயங்கும் பயணிகள் போக்குவரத்து ட்ரோன்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கையின் மற்றொரு முக்கிய மைல்கல்லாகும்.

தரையிறங்கிய பிறகு தனது அனுபவம் குறித்துக் கருத்து வெளியிட்ட அமைச்சர் அனுர கருணாதிலக ​​”நான் பறந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு இருந்தது” என்று தெரிவித்தார்.

ஊடகங்களிடம் பேசிய பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடிதுவக்கு, ட்ரோன்களைப் பயன்படுத்திய வணிக ரீதியிலான பயணிகள் போக்குவரத்து சேவைகள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.

உயர் அதிகாரிகள் மற்றும் சீனாவைச் சேர்ந்த பயணிகள் ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான ‘ஈ ஹாங்’ (eHang) பிரதிநிதிகளுக்கு இடையே கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் அவசர கால சேவைகளுக்காக மின்சாரத்தால் இயங்கும், செங்குத்தாக மேலே எழும்பி தரையிறங்கும் (eVTOL) விமானங்களை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இந்தத் திட்டம் ஆரம்பத்தில் ஒரு சோதனை முயற்சியாகச் செயற்படுத்தப்படுகிறது. வணிக ரீதியிலான செயல்பாடுகள் தொடங்குவதற்கு முன்னதாக, கொழும்பு துறைமுக நகரத்தில் ஆறு மாத காலத்திற்கு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தச் சோதனைத் திட்டத்திற்காக, இருவர் பயணிக்கக்கூடிய ‘E216’ ரக பயணிகள் ட்ரோன் ஒன்று சமீபத்தில் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த ட்ரோனில் 16 சுழலிகள், 12 மின்கலத் தொகுப்புகள், மூன்று விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த மையக் கணினி அமைப்பு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஆளில்லா விமானம், ஒரு மையக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து தொலைதூரத்தில் இருந்தபடி இயக்கப்படுகிறது.

அவசர காலங்கள் அல்லது தகவல் தொடர்பு துண்டிக்கப்படும் சூழல்களில் தானாகவே செயல்பட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வசதிகள் இதில் உள்ளன.

…………….

பிம்ஸ்டெக் சுகாதார அமைச்சர்கள் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் (BIMSTEC) உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கான முதலாவது மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்களும் , பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் நடைபெற்றது.

பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர், பிம்ஸ்டெக் சுகாதார அமைச்சர்கள் சபையின் தலைமைத்துவம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

பிம்ஸ்டெக் சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் அதன் பெறுபேறுகள் தொடர்பில் பிரதிநிதிகள் குழுவினர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். அத்துடன், சுகாதாரத் துறையில் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய துறைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

நிபுணத்துவ அறிவைப் பரிமாறிக்கொள்வதன் மூலமும் திறன் விருத்தியின் ஊடாகவும் பொது சுகாதாரத் துறையில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது வலியுறுத்தப்பட்டது.

சுகாதாரத் துறையில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்கு கூட்டு அணுகுமுறையொன்றின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், முன்னேற்றத்தை அடைவதற்கு ஒவ்வொரு நாடும் தனித்தனியாகச் செயற்படுவதை விடுத்து, பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் அனைத்தினதும் பொதுவான அர்ப்பணிப்பும் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியும் அத்தியாவசியமானவை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

………………

மாகாணசபைத் தேர்தலை நடத்தகோருகிறது சஜித் அணி

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு–செலவுத் திட்டம் இன்று முன்வைக்கப்படவுள்ள நிலையில், மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் மக்கள் தமது தெளிவான பதிலை வழங்குவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்குப் பதிலடி கொடுக்க மக்கள் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முடிந்தால் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்துக்குச் சவால் விடுத்தார்.

……………….

2ஆவது நாளாக தொடரும் பிக்குகளின் போராட்டம்

ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று (12) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், அநுராதபுர புனித பூமியின் அபிவிருத்தித் திட்டத்தை நிறுத்துமாறும் வலியுறுத்தி, பலாங்கொடைகஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்கள் நேற்று (11) சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

……………

 

 

Related Articles

Latest Articles