ஓரிரவில் இலட்சாதிபதியாகி புகழடைந்த சுக்ரா முனவ்வர் வழங்கிய நேர்காணல்

நன்றி – தினகரன் வாரமஞ்சரி

நேர்காணல் – ஷம்ஸ் பாஹிம்

ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பாடியும், ஆடியும் புகழ்பெறுபவர்களிடையேகல்வித் திறமையால் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ள சுக்ராவிற்கு வெறும்
17 வயதுதான். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெற்ற லட்சபதி போட்டியில் இவர் விடையளிக்கும் அழகு, சிங்கள இலக்கியம் பற்றிய ஆழ்ந்த அறிவு, ஒவ்வொரு விடையின் போதும் அது பற்றி அளிக்கும் விளக்கம், சிங்கள புலமை என இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

முழு நாடும் அவரை பாராட்டுகையில் அவர் பற்றிய விமர்சனமும் எழாமலில்லை. மார்க்கத்திற்கு முரணாக அவர் நடந்து கொண்டதாக பெரும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது பற்றியெல்லாம் சுக்ராவிடம் கேட்டோம்.

கே: ஒரே இரவில் பணக்காரியாகி விட்டீர்கள். உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லுங்கள்?

பதில்: எனது குடும்பத்தில் தாய் தந்தை தவிர எனக்கு இரு சகோதரிகள் ஒரு தம்பி இருக்கிறார். தந்தை இலிகிதர். கடந்த 5 வருடங்களாக சர்க்கரை நோயினால் வீட்டோடு இருக்கிறார். அம்மாதான் வீட்டின் அனைத்து தேவைகளையும் கவனிக்கிறார். பொருளாதார கஷ்டம் காரணமாக சகோதரிகளுக்கு கல்வித் துறையில் நீடிக்க முடியவில்லை. நான் உயர்தரம் கற்கிறேன். வறுமையை தோற்கடித்து தாயின் சுமையை இறக்கி வைக்க நான் அர்ப்பணிப்புடன் கற்று வருகிறேன். அந்த அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாகவே இன்று இந்த உயரத்திற்கு வந்திருக்கிறேன்.

கே: லட்சாதிபதி போட்டியில் கலந்து கொள்ள என்ன காரணம்?

பதில்: குடும்ப வறுமை நிலைதான் இதில் பங்கேற்கக் காரணம். ஓன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மடிக்கணினி ஒன்று தேவை. தந்தையிடம் அதற்கான வசதி இல்லை. தாயிடம் நான் கேட்கவில்லை. கணனி வாங்க பணம் இல்லை. மாதாந்தம் தவணை அடிப்படையில் வாங்கினாலும் செலுத்தமுடியுமா என்று சந்தேகம். இந்த நிலையிலே போட்டியில் பங்கேற்றேன். நான் சிறுவயது முதல் திடநம்பிக்கையுடன் செயற்படுபவள். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

கே: நீங்கள் அதிகமாக பெண் உரிமை பற்றி பேசினீர்கள். பெண்களின் சக்தி பற்றி வெகுவாக கதைத்தீர்களே?

பதில்: ஆம் பெண்களுக்கு எல்லா இடங்களிலும் உரிய இடம் வழங்கப்பட வேண்டும். ஆதிகமான உயர் பதவிகளில் ஆண்கள்தான் இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். ஆண்-பெண் ஏற்றத்தாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாம் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றாக வாழும் நிலை உருவாக வேண்டும். நாட்டுப்பற்று அனைவருக்கும் இருக்க வேண்டும். இன்றிருக்கும் பாகுபாடுகள், பிரிவினைகள் என்பவற்றுக்கு முடிவு காணவேண்டும். நாளைய சந்ததி ஒற்றுமையாக வாழவேண்டும்.

கே: சிங்கள மொழியில் இவ்வளவு தேர்ச்சி எவ்வாறு சாத்தியமாகிற்று.?

பதில்: முன்பள்ளி முதல் சிங்கள பாடசாலைகளில்தான் கற்றேன். சிங்கள மொழியை போன்றே நல்லிணக்கத்தையும் பாடசாலையில் கற்றேன். எனது பாடசாலைதான் என்னை புடம்போட்டது. நான் உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவை தெரிவு செய்தாலும் எனக்கு சிங்கள இலக்கியத்தின் மீது அலாதியான ஆர்வம் இருக்கிறது. இலக்கிய நூல்களைத் தேடித்தேடி படிப்பேன். சிங்கள காவியங்கள் அற்புதமானவை. அவை எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

கே: உங்களை மலாலா யூசுபுடன் சிலர் ஒப்பிடுகின்றனர்.?

பதில்: அவரைப் பற்றி அறிந்திருந்தாலும் அவரின் நூல்களை இதுவரை வாசித்தது கிடையாது. நான் மலாலா அல்ல . அவர் தனது நிலைப்பாட்டை பிரபலப்படுத்த தன்னை அர்ப்பணித்தார். நான் எனது நிலைப்பாட்டை சமூகத்தில் பரப்ப பாடுபடுவேன்

கே:பெற்றோர் உங்களுக்கு வழங்கியுள்ள சுதந்திரத்தை முறைகேடாக பாவிக்காமல் நியாயமாக நடக்கிறீர்களா?

பதில்: நான் சிங்கள மொழி பாடசாலையில் சிங்கள சகோதரிகளுடன் கற்கிறேன். அவர்கள் என்னுடன் மிக அன்பாக பழகுவார்கள். என்னை எனது தாய் தான் மோட்டார் சைக்களில் அழைத்து வருவார். மேலதிக வகுப்புகளுக்கும் அவர் தான் அழைத்துச் செ்லவார். அதே போல் பெற்றோர் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் ஒரு போதும் மீறியது கிடையாது.

கே: உங்களை பலரும் புகழ்ந்தாலும் சில விமர்சனங்களும் வரத்தான் செய்கிறது. அது பற்றி?

பதில்: ஆம். நானும் அறிந்தேன். சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி சிலர் விமர்சித்திருந்தனர். முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும என்னை வீடு தேடி வந்து பாராட்டி பரிசில்கள் தந்தார். அவரின் மனைவியும் வந்திருந்தார். அவர் எனக்கு தந்தை மாதிரி. அவர் என் தோளை தட்டி பாராட்டியதை சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். எனது பெற்றோரும் அந்த சமயம் அங்கிருந்தார்கள். அவர் தவறான நோக்கில் அவ்வாறு நடக்கவில்லை. நானும் அதனை தவறாக கருதவில்லை. எமது குடும்பம் வறுமையில் கஷ்டப்பட்ட போது விமர்சனம் செய்யும் யாரும் உதவ வரவில்லை. இன்று மார்க்கம் என்ற பெயரில் என்மீது சேறு பூச முயல்கிறார்கள். நான் ஒரு போதும் எனது மார்க்கத்தை எதற்கும் விட்டுக் கொடுத்ததில்லை.

99 வீதமானவர்கள் எனது திறமைகளை புகழ்கையில் ஒரு வீதத்திற்கும் குறைவானவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை நான் பொருட்டாக கொள்ளவில்லை. அதனைஎனது முன்னேற்றத்திற்கு தடையாக கருதவில்லை. அவை என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றன. எனது மதத்திற்கு முரணான எதனையும் நான் செய்ய மாட்டேன். எனது மதத்தினால் எனக்கு அழுத்தம் வரும் எதனையும் நான் சொல்லவோ செய்யவோ இல்லை.

எனது தனிப்பட்ட வாழ்வில் இஸ்லாத்திற்கு முரணான எதனையும் இது வரை செய்ததில்லை. முன்னேறிச் செல்ல எனது மார்க்கத்தில் எந்த தடையும் கிடையாது. சிலர் பார்க்கும் விதத்தில் தான் தவறு, கோளாறு இருக்கிறது. இந்தத் தடைகளை தகர்த்து முன்னேறுவது சவால் நிறைந்தது. அதற்காக குரல் கொடுக்கவும் முன்னிற்கவும் தயங்க மாட்டேன்

கே: சுக்ரா ஒரே இரவில் பிரபலமடைந்து விட்டீர்கள். இந்த பிரபலம் உங்கள் கல்விக்கு தடையாக அமையாதா?

பதில்: நிச்சயமாக இல்லை. நான் சிறுவயது முதல் கஷ்டப்பட்டு வளர்ந்தவள். கல்வித்துறையில் மேலும் முன்னேறி சிறந்த பெறுபேறு பெற வேண்டும். எனது பெற்றோரின் கஷ்டங்களை போக்க வேண்டும். எனது இலட்சியங்கள் நிறைவேறும் வரை ஓடிக்கொண்டே இருப்பேன். எனது திறமைக்கு இந்தப் போட்டி களமமைத்துக் கொடுத்தது. இதனை படிக்கல்லாக பயன்படுத்தி இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டும்.

கே: உங்களுக்கு பாராட்டுகளும் பரிசில்களும் அள்ளிக் கிடைப்பதாக அறிகிறோம்.

பதில்: ஆம் பலரும் நேரிலும் தொலைபேசியிலும் பாராட்டி வருகிறார்கள். பரிசில்களும் கிடைத்து வருகிறது. நான் ஆசைப்பட்ட மடிக்கணினி கூட அன்பளிப்பாக கிடைத்துள்ளது. மட்டில்லாத மகிழ்ச்சியில் இருக்கிறேன். சில அரசியல்வாதிகள் கூட வந்து பாராட்டினார்கள். பிக்குமார்கள் கூட என்னை பாராட்டியது முஸ்லிம் பெண்ணாக பெருமை தருகிறது. வீடு தேடி பலரும் வருகிறார்கள். இன,மத பேதமின்றி சகலரும் இந்த வெற்றியை கொண்டாடுவது பெருமை தருகிறது

மகளின் வெற்றி பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்ட சுக்ராவின் தாய் இஸ்ஸதுல் பாத்திமா.

இந்த வெற்றி மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. பல தடைகள் கஷ்டங்களைத் தாண்டி இப்படியொரு வெற்றி கிடைத்துள்ளது. வறுமையினால் நாம் பட்ட கஷ்டங்கள் இனித் தீரும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. நான் தான் மகளை சைக்கிளில் பாடசாலைக்கும் வகுப்புகளுக்கும் அழைத்துச் செல்வேன்.

இதனை சிலர் விமர்சிப்பார்கள். முஸ்லிம் பெண் இப்படி சுற்றுவதா என சீண்டுவார்கள். நான் அதை பொருட்படுத்தவில்லை. பொதுவான ஊர்வி டயங்கள் வந்தால் பெண் என்று ஒதுங்காமல் முன்னின்று செய்வேன். ஊருக்கு பாதைபோடக் கூட நான்தான் முன்னின்று செயற்பட்டேன். நான் யாருக்கும் பயப்படவோ ஒதுங்கவோ மாட்டேன். அந்த தைரியம் தான் சுக்ராவிற்கும் இருக்கிறது. மகளின் வெற்றிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

சிலர் பாலித தெவரப் பெருமவுடனான வீடியோவை வைத்து விமர்சித்தும் மதத்தை தொடர்புபடுத்தி கண்டித்தும் வருகிறார்கள். எமது முன்னிலையில் தான் அவர் மகளுடன் படம் பிடித்தார். அதனை தவறாக நாம் பார்க்கவில்லை. நல்ல உள்ளத்துடன் அவர் வந்து மகளை மனதார பாராட்டிச் சென்றார். மார்க்கம் என்ற பெயரில் சிலர் இதனை விமர்சித்து வருகிறார்கள். நாம் என்றும் மார்க்கத்திற்கு உட்பட்டே நடக்கிறோம். இறைவனுக்கு பயந்தே எதனையும் செய்கிறோம். பெற்றோராகிய நாங்களே இதனை தவறாக பார்க்காதபோது சிலர் மட்டும் இதனை பெரிதுபடுத்துகிறார்கள் என்று கூறி முடித்தார் சுக்ராவின் தாயார்.

Related Articles

Latest Articles