“கச்சதீவு விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அரசிடமிருந்தோ அல்லது இராஜதந்திர வழிகளிலோ எந்தக் கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. அது இலங்கைக்குச் சொந்தமானது என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. எனவே, விஜய் வெளியிட்ட கருத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.”
– இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீளப்பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தென்னிந்தியத்திரைப்பட நடிகருமான விஜய், அண்மையில் மதுரையில் இடம்பெற்ற கட்சி மாநாட்டில் கச்சதீவு குறித்து கருத்துத் தெரிவித் ததை அடுத்து, இந்த விடயம் பரவலான பேசுபொருளாக மாறியிருந்தது.
இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,
“கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது. இது இலங்கையிலுள்ள ஒரு தீவாகும். அதில் எவ்வித மாற்றமும் இல்லை.
இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் தேர்தல் மேடைகளில் இதே போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த அறிக்கைகள் எதுவும் எந்தமாற்றத்துக்கும் இட்டுச் செல்லவில்லை.
விஜய் தனது கருத்தை ஒரு பிரசாரக் கூட்டத்தின் போதுவெளியிட்டார். அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ளதால், வாக்கு வேட்டைக்காக நடத்தப்படும் அரசியலாகும்.” – என விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.