கடன் மறுசீரமைப்பை வழங்க தயக்கம் காட்டும் சீனா!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி இன்னும் தீர்ந்துவிடவில்லை. பொருளாதாரம் உடைந்துவீழ்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஒரேயொரு வாய்ப்பு அல்லது வழி மட்டுமே இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவது மட்டுமே இலங்கை தற்போதிருக்கும் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான ஒரே வழியாக இருக்கிறது. இந்த உதவிகள் என்பது நிபந்தனகைளுடன் கூடிய உதவியாகவே இருக்கிறது, இதற்காக இலங்கை பல தீர்க்கமான முடிவுகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமாக கடன் வழங்கிய நாடுகள், அமைப்புக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பேச்சு நடத்தி, சமரசம் செய்துகொள்ள வேண்டும். அதாவது கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான பணிகளை இலங்கை தொடர்ந்து முன்னெடுத்து வந்தது. இன்னமும் இதற்கான இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதில் முக்கியமாக சீனா இந்த விடயத்தில் இழுத்தடிப்புச் செய்கிறது. கடன் மறுசீரமைப்புச் செய்து கொள்வதற்கு மறுத்து வருகிறது.

சீனாவின் நோக்கம்!

சீன உறவு என்பது ஒருபோதும் நட்பு ரீதியானதாக இருக்காது. அது வர்த்தக ரீதியாகவே இருக்கிறது. உலகில் சீனா ஏனைய நாடுகளுடன் உறவு வைத்துக் கொள்ளும் போதும், அதில் என்ன இலாபம் இருக்கிறது என்பதையே பிரதானமாக பார்க்கிறது. கிழக்காசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. ஆபிரிக்க நாடுகளிலும் சீனா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இவை அனைத்தையும் சீனா பொருளாதார அல்லது வர்த்தக ரீதியாகவே தனது காய்களை நகர்த்தி வருகிறது. இலங்கையைப் பொறுத்தவரையிலும், சீனாவின் நோக்கம் என்பது வர்த்தக அல்லது பொருளாதார ரீதியாகவே இருக்கிறது. கப்பல் போக்குவரத்தில் அதீத கவனம் செலுத்தியுள்ள சீனா, இலங்கையை ஒரு பிரதான மையமாகக் கொண்டுள்ளது. அதற்காக இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் அல்லது பொறிக்குள் வைத்துக் கொள்ளவே முயற்சிக்கிறது.

இன்னும் ஒரு மாதத்திற்குள் அதாவது மார்ச் மாத இறுதிக்குள் ஐ.எம்.எப். உதவிகள் இலங்கைக்கு கிடைக்கவில்லையெனில், மீண்டும் மிகப் பெரிய நெருக்கடியை இலங்கை சந்திக்க நேரிடும். கடந்த டிசம்பர் மாதத்திற்குள் ஐ.எம்.எப். உதவிகளைப் பெறுவதற்கு இலங்கை திட்டமிட்டிருந்தாலும், அந்த முயற்சிகள் இழுபறியில் இருந்து வருகின்றது. இதில் 90 வீதமான பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. ஆனால், மிகவும் முக்கியமான, சிரமமான பணியே தற்போது எஞ்சியிருக்கிறது. அதாவது, கடன் வழங்கியுள்ள நாடுகளிடம் பேச்சு நடத்தி, கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க வேண்டும். இலங்கையின் இந்த முயற்சிகளுக்கு சீனாவைத் தவிர அனைத்துத் தரப்புக்களும் சம்மதம் தெரிவித்துள்ளன. ஆனால், சீனா மட்டும் இந்த விடயத்தை இழுத்தடிப்புச் செய்கிறது. சீனா இந்த விடயத்தில் பச்சைக் கொடி காண்பித்திருந்தால், இந்நேரம் இலங்கைக்கு ஐ.எம்.எப். உதவிகள் கிடைத்திருக்கும். பொருளாரம் வழமைக்குத் திரும்ப ஆரம்பித்திருக்கும்.

கடன் மறுசீரமைப்பு செய்துகொள்வதற்கு சீனா மறுக்கிறது. கடந்த வாரம் சீனத் தூதுவருடன் மூடிய அறையில் இலங்கை ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. அதில், இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவத் தயார் என்று சீன தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஆனால், கடன் மறுசீரமைப்பிற்கு சீனா தயக்கம் காட்டுகிறது. சீனாவின் கடனை திரும்பிச் செலுத்த புதிதாக கடன் வழங்க சீனா தயாராக இருக்கிறது. ஆனால் கடனை மறுசீரமைப்பு செய்துகொள்ள தயாராக இல்லை என்று சீனா கூறியுள்ளது. ஆனால், இலங்கையின் கடன் நெருக்கடிக்குத் தீர்வு காண ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படத் தயார் என்று சீனத் தூதரகம் அறிவித்திருந்தது. எனினும், எவ்வளவு தூரம் சீனா இந்த விடயத்தில் இலங்கைக்கு உதவும் என்பது சந்தேகமே. கடன் மறுசீரமைப்பு சீனா தொடர்ந்து தயக்கம் காட்டியது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன்

இலங்கையுடன் சீனா கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ளும் பட்சத்தில், கடன் வழங்கியுள்ள ஏனைய நாடுகளுடனும் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டிவரும் என்று சீனா ஆரம்பம் முதலே மறுசீரமைப்பிற்கு மறுத்து வருகிறது. இதனால்தான் கடனை மீளச் செலுத்த புதிய கடனை வழங்கத் தயார் என்று கூறியிருந்தது. சீனாவிடம் புதிதாக கடன் வாங்கும்பட்சத்தில், கடனையும், வட்டியையும் செலுத்த வட்டிக்கு மீண்டும் கடன் வாங்கும் நிலைமை இலங்கைக்கு ஏற்படும். இது நீண்டகால பொருளாதார மீட்சிக்குத் தடையாக இருக்கும். இதனாலேயே சர்வதேச நாணய நிதியம், கடன் மறுசீரமைப்பிற்கு இலங்கையை ஊக்கப்படுத்தி வருகிறது.

மேகத்தேய நாடுகளுடன் இந்தியாவும் கடன் மறுசீரமைப்பிற்கு இணங்கியுள்ள நிலையில், தான் ஏன் இதற்கு இணங்க வேண்டும் என்ற இருக்கமான நடைமுறையை சீனா பின்பற்றுகிறது.  இதனாலேயே கடன் மறுசீரமைப்பு செய்துகொள்வதற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்க சீனா தயக்கம் காட்டுகிறது.

ஆனால், கடன் மறுசீரமைப்பு செய்துகொண்டு, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவிகள் இலங்கைக்கு கிடைக்கும் பட்சத்தில், சர்வதேசத்தின் நம்பிக்கையை இலங்கை மீண்டுமு; பெற்றுக் கொள்ளும். அதன்பின்னர் சர்வதேச நாடுகளிடமும், சர்வதேச நிறுவனங்களிடமும் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கைக்கு வழி ஏற்படும். இந்த வழியை திறந்துவிடாமல் சீனா தடை ஏற்படுத்துகிறதா என்ற சந்தேகமும் தற்போது வலுத்துள்ளது. இவ்வாறு இந்த நெருக்கடியில் இருந்து மீளும் பட்சடத்தில் தனது கட்டுப்பாடுகள் தளர்ந்துவிடக் கூடும் என்று சீனா கணக்குப்போடக்கூடும். அத்துடன், சீனாவை தனது பொறிக்குள் வைத்துக்கொள்வதற்கு சீனாவிற்கு இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்பதையும் சீனா ஊகித்துவைத்திருக்கக்கூடும். இதற்காகவே தொடர் பேச்சுக்கள் நடந்தாலும் சீனா இன்னும் இலங்கையின் கடன் மறுசீரமைப்புப் பணிகளுக்கு இவ்வளவு தயக்கம் காட்டி வருகிறது.

இலங்கை கடன் மறுசீரமைப்புக்கான உத்தரவாதம் வழங்குவதை சீனா தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. எனினும், சீனாவின் EXIM வங்கி இலங்கைக்கு கடன் நீட்டிப்பை வழங்கியுள்ளதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சு இந்த வாரம் தெரிவித்திருந்தது. EXIM வங்கி, இலங்கைக்கு அதன் கடனை இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இரண்டு வருட கால அவகாசம் போதுமானதாக இல்லாததாலும், முடி வெடுப்பது குறித்து சீனாவின் கடிதத்தில் எதுவும் குறிப்பிடப்படாததாலும் சர்வதேச நாணய நிதியம் இந்த வாய்ப்பை ஏற்கவில்லை.

இலங்கையை மேலும் பொருளாதார சரிவில் இருந்து காப்பாற்ற, மேலும் 15 வருட கடன் மறுசீரமைப்புடன், நாட்டிற்கு 10 வருட கால அவகாசத்தை பரிந்துரைப்பதாக கடனாளி நாடுகளின் பரிஸ் கிளப் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் , இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலாண்ட் இந்தியா சாதகமான உத்தரவாதத்தை வழங்கியதாகவும் ஆனால் சீனா வழங்கியது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்றும் கூறினார் .

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், அமெரிக்க துணைச் செயலாளரின் கருத்துகள் உண்மையைப் பிரதிபலிக்கவில்லை என்று கூறினார். “இலங்கையுடனான சீனாவின் நெருங்கிய ஒத்துழைப்பைக் கண்டு விரலைக் காட்டாமல், “தற்போதைய சிரமங்களில் இலங்கைக்கு உதவ சில நேர்மையைக் காட்டவும், உண்மையில் ஏதாவது செய்ய வேண்டும்” என்றும் அவர் அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டார்.

Related Articles

Latest Articles